முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவியின்
உடலுக்கு டிசம்பர் 10ஆம் திகதி இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த தேசிய அளவிலான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹெலிகாப்டரில் வந்தனர்.
அப்போது, குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட நாடு முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பிபின் ராவத்தின் உடல் இன்று குன்னூரில் இருந்து டெல்லிக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் டிசம்பர் 10ஆம் திகதி காலை 11 மணி முதல் 2 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு டெல்லி கண்டோன்மெண்டில் உள்ள மயானத்தில் இருவரின் உடல்களும் தகனம் செய்யப்படும்.