free website hit counter

இவங்களுக்கு வேற வேலையே இல்லயா? - பிரியங்கா காந்தி ஆவேசம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உத்தர பிரதேச மாநில பாஜக அரசு தனது பிள்ளைகளின் சமூக வலைதள கணக்கை வேவு பார்ப்பதாக

 காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆளும் பா.ஜ.க., முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

இந்த முறை எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன. காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை அக்கட்சி எதிர்கொள்கிறது. முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கெத்து காட்டி வருகிறார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்து விட்டால், கிட்டத்தட்ட, மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எழுதப்படாத விதி உள்ளதால், அங்கு ஆட்சி அதிகாரத்தில் அமர, அனைத்து கட்சிகளும் இரவுப் பகலாக பணியாற்றி வருகின்றன. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க.,வுக்கு, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கருத்துக் கணிப்புகளிலும், அகிலேஷ் யாதவுக்கு முதலமைச்சர் ஆவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அகிலேஷ் யாதவ், தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், லக்னோவில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது:
தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுவது ஒரு புறம் இருக்கட்டும். என் பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கை கூட ஹேக் செய்கிறார்கள். அவர்களுக்கு வேற வேலையே இல்லையா? கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநில வளர்ச்சிக்கு எந்தத் திட்டத்தையும் அறிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது ஏன் திட்டங்களை அறிவித்து வருகிறார். உத்தர பிரதேச பெண்களுக்கு நான் ஒன்றே மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தேர்தலில், அவர்கள் தங்களது சக்தியை உபயோகிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பிரியங்கா காந்திக்கு, 18 வயதில், மிரயா வாத்ரா என்ற மகளும், 20 வயதில் ரையான் வாத்ரா என்ற மகனும் உள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction