free website hit counter

நாளை முதல் 12-14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும், பிப்ரவரி 2ஆம் திகதியில் இருந்து முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் திகதியில் இருந்து, 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணைநோய் கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

12 வயதை தாண்டிய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வயதினருக்கு செலுத்த ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது.

இந்த தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இவான்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரை செய்தது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில், 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு 16ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் பிறந்து, ஏற்கனவே 12 வயதை பூர்த்தி செய்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தப்படும்.

இதுபோல், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 60 வயதை தாண்டியவர்களில் இணைநோய் கொண்டவர்கள் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. 60 வயதை கடந்த அனைவருக்கும் 16ஆம் திகதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவும் இதே தகவலை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், ‘‘குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால், நாடும் பாதுகாப்பாக இருக்கும். எனவே, 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 60 வயதை தாண்டியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction