போலீஸ் காவலில் இறந்த நபரின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆக்ராவுக்கு சென்றபோது அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அப்போது சில பெண் போலீசார் பிரியங்காவிடம் வந்து செல்ஃபி படங்களை எடுத்துக்கொண்டனர்.
இப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்நிலையில், பிரியங்காவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண் போலீசார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் போலீசார் செல்ஃபி எடுத்துக்கொண்டது காவல்துறை விதிகளை மீறும் வகையில் உள்ளதா என விசாரணை நடத்தும்படி லக்னோ காவல் ஆணையர் துருவ் காந்த் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில் காவல் துணை ஆணையர் விசாரணை நடத்தி சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்நிலையில், பெண் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் செயலுக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி ட்விட்டரில், “பெண் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு இந்த செல்ஃபி படங்கள் யோகிஜிக்கு (உ.பி முதல்வர்) வருத்தமளித்துள்ளதாக எனக்கு தெரியவந்துள்ளது.
என்னுடன் செல்ஃபி எடுப்பது குற்றம் எனில் எனக்குதான் தண்டனை கொடுக்க வேண்டும். இந்த நேர்மையான, கடுமையாக உழைக்கும் பெண் போலீசாரின் வேலையை கெடுப்பது அரசுக்கு பொருத்தமான செயல் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.