free website hit counter

சென்னை தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நிறைவு - 8.30 லட்சம் பேர் கண்டுகளிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நேற்று நிறைவு பெற்றது.
சென்னை,

சென்னை தீவுத்திடலில் கடந்த ஜனவரி 4-ந்தேதி தொடங்கிய 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நேற்று நிறைவு பெற்றது. இதன் நிறைவு விழா நேற்று இரவு நடந்தது. இதில் சிறந்த அரங்கம் அமைத்த அரசு துறையினருக்கு அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

அந்தவகையில் அரங்கம் அமைப்பில் ஓட்டு மொத்தமாக சிறந்து விளங்கியதற்காக காவல்துறைக்கும், தமிழ்நாடு அரசுத்துறைகளில் சிறப்பான அரங்கம் அமைப்பிற்கு முதல் பரிசு பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறைக்கும், 2-ம் பரிசு உயர்கல்வித்துறைக்கும், 3-ம் பரிசு சிறைத்துறைக்கும் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியம், தெற்கு ரெயில்வே, மெட்ரோ ரெயில் நிறுவனம் உள்ளிட்ட சிறப்பாக அரங்கம் அமைத்த மத்திய அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி கடந்த ஜனவரி 4-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் மாநில அரசுத் துறைகளின் 27 அரங்கங்களும், 21 பொதுத்துறை நிறுவன அரங்கங்களும், மத்திய அரசின் இரண்டு துறைகளின் அரங்கங்களும் பிற மாநில அரசின் ஒரு அரங்கமும் பொருட்காட்சியில் பங்கேற்றன.

அரசின் ஆக்கபூர்வ பணிகளையும் மக்கள் நலனுக்காக செயல்படுத்தும் புதிய திட்டங்களையும் எளிதில் புரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன. பொருட்காட்சியில் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், 30 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

இப்பொருட்காட்சியில் 110 சிறிய கடைகளும், 30 பெரிய அரங்கங்களும் 15-க்கும் மேற்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் காணக் கிடைத்தன. பனிக்கட்டி உலகம், மீன் காட்சியகம், பேய் வீடு, 3 டி தியேட்டர் போன்ற காட்சிகள் கண்காட்சியில் களை கட்டின.

டெல்லி அப்பளம் உள்ளிட்ட உணவு வகைகளும், 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இதுவரை பார்த்திராத விளையாடி மகிழ்ந்திட 32-க்கும் மேற்பட்ட விளையாட்டுச் சாதனங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு வளாகமும் இங்கே இடம்பெற்று இருந்தது. சிறுவர் ரெயில், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் விளையாட்டுச் சாதனங்கள் மற்றும் நவீன கேளிக்கை சாதனங்கள் இளையோரைச் சுண்டி இழுக்கும் வண்ணம் அமைக்கப்பட்டு ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

8 லட்சத்து 30 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பார்த்து சென்றுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு வருகையை ஒப்பிட்ட போது, ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பார்வையிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவருமான டாக்டர் பி.சந்தரமோகன், சுற்றுலா இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சந்தீப் நந்தூரி, சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction