கோவை நவக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பெண் யானைகள்
ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
கோவை மாவட்டம் நவக்கரையை அடுத்து மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று இரவு 9.05 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானையும் 12 முதல் 15 வயது மதிக்கதக்க இரு பெண்யானை என மூன்று பெண் யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது.
அப்போது, அந்த தண்டாவளத்தின் வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது. இதில் 3 பெண் யானைகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
யானைகள் மீது ரயில் மோதிய சம்பவம் குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினரும், ரயில்வே ஊழியர்களும் விரைந்து வந்தனர்.
ஏற்கனவே வாளையார், மதுக்கரை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இங்கு ரயில்களை குறைவான வேகத்தில் இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. ஆனால் வனத்தையொட்டிய இந்த பகுதிகளில் ரயில் வேகமாக சென்றதே யானைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகின்றது.
இதே போல பல முறை காட்டுயானைகள் தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் அடிக்கடி உயிரிழந்த நிலையில், யானைகள் உயிரிழப்பு நடைபெறாமல் இருக்க ரயில்வே நிர்வாகமும், வனத்துறையும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். எனினும், யானைகள் உயிரிழப்பு தற்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.