free website hit counter

குழந்தை திருமணங்கள் செய்ததாக 3 நாட்களில் 2441 பேர் கைது - அசாம் அரசு அதிரடி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகும். 18 வயதிற்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனால், சட்டப்படியாக திருமண வயதான 18 வயது அடைவதற்கு முன் நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதனிடையே, 2019-21-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் அசாமில் குழந்தை திருமணம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது தெரியவந்தது.

ஒட்டுமொத்தமாக நாட்டில் குழந்தை திருமணம் நடைபெறும் சராசரி 6.8 சதவிகிதமாக இருந்து வரும் நிலையில் அசாம் மாநிலத்தில் உச்சபட்சமாக எச்சரிக்கும் வகையில் 11.7 சதவிகிதம் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இது அசாமில் அதிக திருமணங்கள், அதிக குழந்தை இறப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக இந்த ஆய்வு நடந்த சமயத்தில் அசாமில் 15 வயது முதல் 19 வயதிற்கு உள்பட்ட 11.7 சதவிகித சிறுமிகள் திருமணமாகி குழந்தைகளுக்கு தாயாக உள்ளனர் அல்லது கர்ப்பிணியாக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த ஆய்வறிக்கையை மையமாக கொண்டு குழந்தை திருமணத்தை தடுக்க அசாம் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ள முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா அசாம் அரசு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுத்தது.

அதன்படி, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த இளைஞர்கள் மற்றும் ஆண்கள் கைது செய்யப்படுவர். அதேபோல் 14 வயதிற்கும் குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அசாம் முதல்-மந்திரி அறிவித்தார்.

இதனை தொடர்ந்து அசாமில் குழந்தை திருமணத்தை ஒழிக்க அசாம் அரசு அதிரடியாக களமிறங்கியது. அதன்படி, அசாமில் குழந்தை திருமணம் செய்த, குழந்தை திருமணம் செய்து வைத்த பலரையும் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கைது செய்து வருகின்றனர். 14 வயதிற்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ சட்டமும், 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது.

மேலும், குழந்தை திருமணங்கள் அனைத்தும் சட்டவிரோதமானது என அறிவிக்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 441 பேரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் குழந்தை திருமணத்தை நடத்தி வைத்த மத போதகர்கள் என 2 ஆயிரத்து 441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக 4 ஆயிரத்து 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட குழந்தை திருமணம் செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென பெண்கள் சிலர் போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு சில இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction