டில்லியில் நடிகர் விஜயிடம் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணைகள் இன்று சுமார் ஆறு மணிநேரம் நடைபெற்றதாகவும், இவ் விசாரணையின் தொடர்ச்சி நாளையும் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் தொடர்பாக, தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் போன்றவர்களிடமும், கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சிலரிடமும், சிபிஐ டெல்லி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், த.வெ.கழகத்தின் தலைவர் விஜய் விசாரணைக்கு இன்று ஜனவரி 12, டில்லி சிபிஐ அலுவகத்தில் ஆஜராகவேண்டும் என சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றிருந்தார் விஜய். அவரிடம் இன்று மாலை 6.30 மணி வரை விசாரணை செய்த சிபிஐ நாளையும் தங்கள் விசாரணையைத் தொடரவுள்ளதாக அறியவருகிறது. இதற்காக விஜய் டில்லியில் இன்று தங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.
