சபரிமலை மண்டல விரதம் ஆரம்பித்த முதல் 2 நாட்களில் 3 இலட்சம் பேர் கூடியதில் பெரும் நெரிசல். கட்டுக்கடங்காமல் கூட்டம் சேர்ந்ததால், உணவு, நீர், கழிப்பறை, போன்ற வசதிகள் கிடைக்காமல், பலரும் அவதி.
பலமணிநேரத் தாமதத்தினால் குழந்தைகள் , பெண்கள், முதியவர்கள், சோர்வு மயக்கம் என்பவற்று உள்ளாவதாகவும், கூட்ட நெரிசலில் சிக்கி 60 வயதுப் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்ட நெரிசலில் தாக்குப் பிடிக்க முடியாத பல பக்தர்கள், தரிசனம் காணமலேயே திரும்பியிருப்பதாகவும் அறியவருகிறது.

முன்னேற்பாட்டுக் குறைபாடுகள் குறித்து, தேவசம்போர்ட் மீது கேரள உயர்நீதிமன்றம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, தினமும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி கவுண்டர்கள் மூலம் 20 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என, கேரள உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
இதேவேளை தற்போது சபரிமலையில் இருக்கும் கூட்டத்தைக் குறைக்கும் விதமாக, இன்று முதல் அடுத்த வரும் 5 நாட்களுக்கு தினமும் 75 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், வரும் 24ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 5 ஆயிரமாக குறைக்கவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன்னிதானப் பகுதிகளில் 3500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ள போதிலும், நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதனால் பம்பை, நிலக்கல் பகுதிகளில், பெரும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, மேலதிகமாக, அதிவேக அதிரடிப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் என்பன உடனடியா சபரிமலைக்கு வரவழைக்க அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 30 பேர் அடங்கிய முதல் குழு சபரிமலைக்கு வந்து சேர்ந்துள்ளது.
கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், பம்பையில் செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு கவுண்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதேவேளை நிலக்கலில் கூடுதலாக 7 கவுண்டர்கள் திறக்கப்பட்டு, நெரிசலைக் குறைக்கும் வகையில் தரிசனத்துக்கான பதிவுகள் வழங்கப்படுகின்றன. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர், மண்டல காலத்தின் தொடக்கத்தில் இந்த அளவுக்கு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. போதிய முன்னேற்பாடுகளை செய்யாதது தவறுதான். தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்ற பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் தெரிவித்திருப்பதாக அறியவருகிறது.
