தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இருவரும் ஒரே மேடையில் இணைந்து நின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் பேராயகம் சார்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் பேச்சுத்திறனை அறியும் விதத்தில் 9 மண்டலங்களாக பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. அதன் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சீமான், “பிரதமர் மோடி உலகம் முழுவதும் செல்கிறார் என்றும் செல்லும் இடமெல்லாம் உலகின் முதல்மொழி தமிழ் எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை என்றும் கூறினார்.
மேலும் இந்திய மொழியின் தொன்மையை தமிழில் இருந்து அறியலாம் என இந்திய பிரதமர் கூறியதை சுட்டிக்காட்டிய சீமான் உலகில் பல்வேறு நாடுகளில் மக்கள் தமிழை கற்றுக் கொள்ள பேரார்வம் கொண்டு வருகின்றனர் எனவும் பிரதமர் தெரிவித்தார் என பேசினார். மேலும் தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு தற்போதைய தலைவர் அண்ணாமலையே காரணம் எனவும் சீமான் குறிப்பிட்டார்.
தொடர்ந்து
மேடையில் பேசிய அண்ணாமலை, அண்ணன் சீமானை ஒரு அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதை விட ஒரு போர் தலைவனாக தான் நான் பார்க்கிறேன் என தெரிவித்தார். தன்னுடைய கொள்கைக்கு எந்த நிலையாக இருந்தாலும் போராடுவேன் என நிற்பவர் சீமான் என்றும் தனக்கும் சீமானுக்கும் வித்தியாசம் இல்லை என குறிப்பிட்ட அண்ணாமலை, தான் தேசியத்தில் தமிழை பார்ப்பதாகவும் சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார் என்றும் தெரிவித்தார்.
தானும், சீமானும் ஒரே மேடையில் அமரும் போது கண்டிப்பாக சர்ச்சைக்குரியதாக மாறும் என குறிப்பிட்ட அண்ணாமலை, ஆனால் இதை கடந்து நாம் அனைவரும் நல்லதை காண வேண்டும் என தெரிவித்தார்.