தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா அரசுக்கும், தமிழ்நாட்டில் ஆட்சி புரியும் திமுக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
பாரதிய ஜனதா தலைமையில் உள்ள மத்திய அரசு அறிவித்துள்ள தேசியக் கல்விக் கொள்கையை, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஏற்க மறுத்து வருகிறது. மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசியக் கல்விக் கொள்கை வாயிலாக இந்தி மொழியை மத்திய அரசு திணிக்க முயல்வதாக தமிழ்நாடு அரசு குற்றம் சுமத்தி வருகிறது.
ஆனால், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்பதாக அறிவித்து, பின்னர் அதில் இணைய மறுப்பதால், தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக - பாஜக அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவுகிறது.
இந்த நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டார். அதில், "தேசிய கல்விக் கொள்கையின் ஒருபகுதியாக, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக அரசு ஒப்புக் கொண்டது. நான் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதாக முதல்வர ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன். கடந்த 2024 மார்ச் 15ல் தமிழகபள்ளி கல்வித்துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை பகிர்கிறேன்" என்று கூறி அந்த கடிதத்தையும் பகிர்ந்தார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், "தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 2018 - 19 கல்வியாண்டில் தமிழ் வழிக்கல்வியில் 65.87 லட்சம் ஆக இருந்த மாணவர் சேர்க்கை 2023-24 ல் 46.83 லட்சமாக குறைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் 19.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.
67 சதவீத மாணவர்கள் ஆங்கில வழி பள்ளியில் படிக்கின்றனர். அதேநேரத்தில் தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை 54 சதவீதத்தில்(2018 -19) இருந்து 36 சதவீதம்(2023- 24) ஆகக் குறைந்துள்ளது" என்று தெரிவித்தார்.
தர்மேந்திர பிரதானின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவொன்றை வெளியிட்டார். அதில் " எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் மாறவில்லை. அதில் உறுதியாக இருக்கிறோம். தர்மேந்திர பிரதான் வெளியிட்ட கடிதத்தில், 'புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய தமிழ்நாடு அரசு குழு அமைக்கும். அந்த குழுவின் பரிந்துரைப்படி கையெழுத்திடுவது பற்றி முடிவு செய்யப்படும்' என்றுதான் இருந்தது. இரு மொழிக் கொள்கையையே தமிழ்நாடு எப்போதும் ஆதரிக்கும்" என்று தெரிவித்தார்.
தேசியக்கல்வி கொள்கை விவகாரம் இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர்.