இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 48வது மாநாடு பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தில் நாம் தோற்றுவிட்டோம் எனக் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு. இஸ்லாமிய நாடுகளுக்கிடையே அரசியல், பொருளாதாரம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உருவானது. இந்த அமைப்பின் நடப்பு ஆண்டிற்கான மாநாட்டில் பேசுகையிலேயே இம்ரான்கான் மேற்கண்டவாறு குறிட்டதாகத் தெரியவருகிறது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை மேற்கத்திய நாடுகள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இஸ்லாமிய நாடுகளாக நாம் பிரிந்துள்ளோம். இந்தியா, இஸ்ரேல், மேற்கத்திய நாடுகள் அதை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளன. அதனால் பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீர் பிரச்சனைகளில் நாம் எதுவும் செய்ய முடியவில்லை.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ இந்தியா ரத்து செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எந்தவித அழுத்தத்தையும், எதிர்வினையையும் உணரவில்லை. எதிர்காலத்தில் வெளி நபர்களை காஷ்மீரில் குடியமர்த்தி காஷ்மீரின் மக்கள் தொகையில் மாற்றத்தை இந்திய கொண்டுவர நினைக்கிறது. ஆனால் இதை யாரும் எதிர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.