அதிமுக ஆட்சியில் கவரிங் நகைகளை வைத்து பல கோடி ரூபாய் நகை கடன் வாங்கி மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன், நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அந்த அறிவிப்பு தாமதமானதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் இதுகுறித்துப் பேசியதாவது,
"கடந்த அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகள் புற்று போல் அதிகரித்துள்ளது.
நகைகளை அடமானம் வைக்காமலேயே பல கோடி ரூபாய்க்கு நகை கடன் வழங்கி மோசடி செய்துள்ளனர். பல்வேறு வங்கிகளில் கவரிங் நகைகள் வைத்து நகை கடன் பெறப்பட்டுள்ளது. மோசடி செய்தவர்கள் மீது விரைவில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கியதில் பல தில்லுமுல்லு நடந்துள்ளது. போலியான ஆவணங்களை சமர்ப்பித்து நகைக்கடன் பெற்றுள்ளனர். நகைக்கடனில் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்."
எனக் கூறினார்