தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசின் உளவுத்துறையில் பணியாற்றியவர்.
நேற்றைய தினம் சென்னையில் உள்ள ராஜ்பவனில் எளிமையாக நடந்த விழாவில் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்றதை அடுத்து முதல் வேலையாக நேற்று மாலை 4.30 மணியளவில் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மாமல்லபுரத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றார்.
அங்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி விஜயகுமார் ஆகியோர் ஆளுநரை வரவேற்றனர். கடற்கரை கோயில் மற்றும் சிற்பங்களை சுமார் அரை மணி நேரம் பார்வையிட்டனர். அப்போது கோயிலின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார். தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையை ஒட்டி மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் முக்கிய இடங்களை பார்வையிட்டு பின் சென்னைக்கு திரும்பினார்.