அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியில் புதிய மாற்றத்தை கொண்டு வர தேவசம் வாரியம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
சபரிமலை அய்யப்பன் கோயிலை திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் நிர்வகித்து வருகிறது. சபரிமலைக்கு பக்தர்களின் வருகையால் கேரள அரசுக்கு ஆண்டுதோறும் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. இந்த சூழலில் அய்யப்பன் கோயிலில் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியானது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
நாள்தோறும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பதிவு செய்பவர்களில் பலர் தரிசனத்திற்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த மாத பூஜையின் போது மட்டும் 6,772 பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை. இதன் காரணமாக மற்ற பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.
இதுதொடர்பாக திருவாங்கூர் தேவசம் வாரியம் தலைவர் வாசு கூறுகையில்,
"ஆன்லைன் முன்பதிவிற்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிப்பது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் இதுகுறித்து திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம். அதாவது, அய்யப்பன் கோயில் தரிசனத்திற்கு குறிப்பிட்ட தொகை ஆன்லைன் முன்பதிவிற்கு விதிக்கலாம்.
இவ்வாறு முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, அந்த கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். ஒருவேளை தரிசனத்திற்கு வரவில்லை என்றால் அந்த கட்டணம் முழுவதும் கோயிலுக்கே சென்றுவிடும். வரும் மண்டல காலம் முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அனைத்து பக்தர்களுக்கு சரியான முறையில் வாய்ப்பு கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.