சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதால் முன்னாள் எம்.பி. பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கழகத்தின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயற்பட்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயற்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு. பரசுராமன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி பரசுராமன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்து வந்தார். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளரான இவருக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வைத்திலிங்கமே இவருக்கு எதிராக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பரசுராமன் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.