இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தலைநகரான டெல்லி ஊரடங்கு கட்டுப்பாடுகளால் முடங்கிப்போனது. தற்போது பாதிப்பு குறைந்துவரும் நிலையில் அங்கு இன்று முதல் சில கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய தேவைகளை மக்கள் வெளியே நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகிவருகிறது.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தலைநகர் டெல்லியில் குறைந்துள்ளது. இதனையடுத்து நேற்று டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஊரடங்கு தளர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இன்று முதல் அங்கு ஊரடங்கு தளர்வுகள் எனும் அடிப்படையில் குறிப்பிட்ட சில செயல்பாடுகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆகவே இன்றுமுதல் அனைத்து சந்தைகளிலும் உள்ள அனைத்து கடைகளும் அடுத்தடுத்து திறக்கப்படவும்; வணிக வளாக கடைகளையும் திறக்கவும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சந்தைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரையே திறக்க அனுமதிக்கப்படும்.
அரசு உத்தரவின்படி, சலூன் கடைகள் திறக்கவும், மெட்ரோ மற்றும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுடன் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எனினும் ஸ்பாக்கள், பள்ளி, கல்லூரி, கல்வி மற்றும் பயிற்சி மையம் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, மத திருவிழாக்கள் ஆகியவற்றுக்கு தடை தொடரும். அதேபோல் பொது நிகழ்வுகளை ஓட்டல்களில் நடத்தும் தடை நீடிக்கப்படுவதோடு வீடுகளில் 20 பேர்களோடு திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.