அரபிக் கடலில் உருவான டவ்தே புயலால் மேற்கு தொடர்ச்சியை அண்மித்த பகுதிகளில் கனமழை பெய்ததுடன் கேரளா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்த இந்த புயல் மும்பை கடல் பகுதி வழியாக இன்று குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் நேற்று அதிகாலை தீவிரமடைந்த புயல் வேகமாக நகர்ந்து தீவிர புயலாக மாறியது. இதனால் நேற்றிரவே குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கத்தொடங்கியது இதன் காரணமாக இடைவிடாது மழையுடன் கூடிய சூறாவளி காற்று வீசியதில் மும்பை நகரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மின்கம்பங்கள், தற்காலிக கொரோனா மையங்களில் கூரைகள் என அனைத்தும் தூக்க வீசப்பட்டு சேதங்கள் ஏற்பட்டன. மோனோ ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. மேலும் சாலைகளில் வெள்ளமும் சூழ்ந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை விமான நிலையமும் பல மணி நேரம் மூடப்பட்டது மேம்பாலம் ஒன்றும் மூடப்பட்டதால் மும்பை நகர இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குஜராத்தின் சில கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை மற்றும் சூறாவளியால் மரங்கள் சரிந்துவிழுந்தும் மின்கம்பங்களும் சாய்ந்ததன.
மேலும் கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் புயலுக்கு 14 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.