குஜராத் மாநிலத்தை புரட்டிப்போட்ட 'டவ்தே' புயல் ஏற்படுத்திய சேதங்களை பிரதமர் மோடி வானுர்தியில் சென்று பார்வையிட்டார். மேலும் உடனடி நிவாரணமாக ரூ.1,000 கோடியை அறிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை அரபிக்கடலில் உருவான 'டவ்தே' புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடந்த செல்கையில் கடலோரப்பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இதுவரை காலம் இல்லாத அளவுக்கு இந்தப்புயல் அம்மாநிலத்தை புரட்டிப்போட்டது. கிட்டத்தட்ட 16 ஆயிரம் வீடுகள் இடிந்ததாகவும், 40 ஆயிரம் மரங்கள் சரிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் 70 மின்கம்பங்கள் சாய்ந்ததில் பல கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.
பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும் பெய்தமையால் வெள்ளம் ஏற்பட்டது இதில் 13 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட விரும்பி நேற்று டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டார். குஜராத்தின் பாவ் நகரில் சென்று இறங்கிய பிரதமர் மோடியை அம்மாநில முதல் - மந்திரி வரவேற்றார்.
பின்னர் புயலால் பெரும் பாதிப்படைந்த கிர்-சோம்நாத், பாவ்நகர், அம்ரேலி, உனா, டையு யூனியன் பிரதேசம், ஜபாராபாத், மகுவா உள்ளிட்ட பகுதிகளை விமானத்தில் சென்று ஆய்வு செய்தார்.
இதனையடுத்து ஆமதாபாத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்தை தொடர்ந்து குஜராத் புயல் பாதிப்புக்காக உடனடி நிவாரண தொகையை அறிவித்தார். அவ்வகையில் மத்திய அரசு ரூ 1,000 கோடி நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் புயலால உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.