பெப்ரவரி மாதம் ஆரம்பித்த ரஷ்ய உக்ரேனிய யுத்தம் எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர்களில் ஒருவரான ஓலெக்கி அரெஸ்டோவிச் எதிர்வு கூறியுள்ளார்.
அதுவரை போரிடவே ரஷயாவின் வளங்கள் போதுமானதாக இருக்கும் எனவும், சிலவேளை அதற்கு முன்னதாப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டால் முன்னதாகவே முடிந்துவிடவும் கூடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என அறியவருகிறது. இதேவேளை உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேலும் ஒரு மாதத்திற்கு இராணுவச் சட்டத்தை நீட்டித்துள்ளார். அத்துடன் ரஷ்ய வீரர்களைச் சரணடையவும், சரணடைவபவர்களுக்கு மிகச் சிறந்த வாழ்வினை வழங்குவதற்கு உத்தரவாதம் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மணிநேரங்களில், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் பிராந்தியத்தின் முழுப் பகுதியையும் ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன என்று மாஸ்கோ பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் இன்று காலை ரஷ்ய செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவிற்கு இராணுவ ஆதரவைக் கொடுக்க சீனா தயாராக இருப்பது மேற்குலகைக் கவலையடையச் செய்யும் நிலை. இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது. இதேவேளை நேற்று ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளிடையே இடம் பெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் இன்று நடைபெறுகிறது.
மறுபுறம் நேட்டோ தலைவர்கள் அடுத்த வார இறுதியில் பிரஸ்ஸல்ஸில் ஒரு அசாதாரண சந்திப்பை பரிசீலித்து வருகின்றனர், இதில் ஜனாதிபதி ஜோ பிடன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி CNBC செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அதேவேளை மோதலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் முயற்சிகள் தொடர்கின்றன. சுமி, கொனோடோப், ட்ரோஸ்டியானெட்ஸ் மற்றும் லெபெடின் நகரங்களில் இருந்து மனிதாபிமான பாதைகளைத் இன்று திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.