சுவிற்சர்லாந்தின் முக்கிய வங்கியான UBS, கடந்தநாட்களில் பெரும் நிதிநெருக்கடிக்குள்ளான போட்டியாளரும், 2வது நிலையிலிருந்து பெரு வங்கியான Credit Suisse ஐ மூன்று பில்லியன் பிராங்குகளுக்கு வாங்கிக் கொண்டது.
இததற்கான பேச்சுவார்த்தைகள் சென்ற வார இறுதியிலிருந்தே நடைபெற்று வந்த போதும், சுவிஸ் மத்திய வங்கியின் 100 பில்லியன் சுவிஸ் பிராங்குகள்நிதியுதவியுடன், Credit Suisse ஐ UBS கையகப்படுத்தியுள்ளது. சுவிற்சர்லாந்தின் நிதியியல் நிலைமை தளர்ந்துவிடாதிருக்க எடுக்கப்படும் இந்த நிதி நடவடிக்கையை ஆதரிப்பதாக சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியும் அறிவித்துள்ளது.
அமெரிக்க நிதிச்சரிவுகளால் பாதிப்புற்ற சுவிற்சர்லாந்தின் 2வது நிலை வங்கியான Credit Suisse புதிய நிதியை திரட்ட முடியாமல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக சுவிஸ் மத்திய வங்கியான Swiss National Bank 50 பில்லியன் சுவிஸ் பிராங் தொகையை கடனாக வழங்கியபோதும், நிதி நிலைமையை மேம்படுத்திக்கொள்ள முடியாத Credit Suisse வங்கியை மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்யமுடிவு செய்யப்பட்ட நிலையில், சுவிஸின் UBS வங்கி அதனை 3பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு வாங்கிக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இரு வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்படுவதால், சுவிற்சர்லாந்தில் வங்கி கட்டமைப்பு வலிமை அடைவதுடன், ஐரோப்பிய சந்தையிலும் நிதிநிலை குறித்த அச்சம் குறையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் Credit Suisse வாடிக்கையாளர்களுக்கு சுமூகமான மாற்றம் மற்றும் தடையற்ற சேவையை உறுதி செய்வதில் வங்கி இப்போது முழுக் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எந்த நேரத்திலும் கிளைகளில் உள்ள ஊழியர்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பரபரப்பான வார இறுதிப் பேச்சுவார்த்தைளின் முடிவாக, 167 வருடங்கள் பழமையும் பாரம்பரியமும் மிக்க ஒரு வங்கி அதன் கடுமையான போட்டியாளருடன் இணைந்துள்ளது. இந்த இணைவு கடந்த சில வருடங்களாகவே உணரப்பட்டிருந்த நிலையில் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.