ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் தெற்கு பிரான்சின் பகுதிகளில் இன்று 28.04.25 பிற்பகல் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பிற்பகல் 12.50 மணி முதல் ஏற்பட்ட இந்த மின்தடை காரணமாக, அனைத்து இணைய இணைப்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பிரயாணங்கள் தடைப்பட்டுள்ளன.
மின்சாரத் தடைகள் மாட்ரிட்டின் விமான நிலையங்கள் மற்றும் தீபகற்பத்தின் பெரும்பகுதயிலுள்ள ரயில்களிலும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. ரயில் போக்குவரத்துக்கள் பலவும் தடைபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
தலைநகரின் மெட்ரோவும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், லிஸ்பனிலுள்ள விமான நிலையங்களிலும், பார்சிலோனா-எல் பிராட்டில்விலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரவலாக ஏற்பட்ட மின்சாரம் தடைபட்டதற்கு சைபர் தாக்குதல் காரணமா என்பது குறித்து தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் (Incibe) விசாரித்து வருகிறது.
செய்தித்தாள் மேற்கோள் காட்டிய அரசாங்க வட்டாரத் தகவல்களின்படி, பல்வேறு அமைச்சகங்களின் குழுக்களுடன் சேர்ந்து, பெருமளவிலான மின்வெட்டுக்கான காரணங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. ஆனால் மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து எந்த தகவலையும் மின்சார நிறுவனங்கள் அளிக்கவில்லை என்று ஸ்பானிஷ் செய்தித்தாள் எல் பைஸ் தெரிவித்துள்ளது.