கத்தோலிக்கத் திருச்சபையின் 266வது புனித பாப்பரசரான போப் பிரான்சிஸ் அவர்கள் ஏப்ரல் 21ந் திகதி மறைந்ததைத் தொடர்ந்து, எப்ரல் 26ந் திகதி அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து திருச்சபைக்கான 267வது பாப்பரசைத் தெரிவு செய்வதற்கான மாநாடு, இன்று நடைபெற்றது. காலை மாநாட்டில் கலந்து கொண்ட 133 கார்டினல்களும், கார்டினல்கள் கல்லூரியின் டீன் கார்டினல் ஜியோவானி பாட்டிஸ்டா ரே தலைமையில் இடம்பெற்ற திருப்பலி பூஜையில் கலந்து கொண்டார்கள். காலை 7.00 மணிமுதல் சென் பீட்டர் சதுக்கத்தில் விசுவாசிகள் கூடத் தொடங்கினார்கள்.
புதிய பரிசுத்த தந்தையின் தேர்தலை உலகிற்கு அறிவிக்கும் நோக்கில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோருக்கான அமைதியான வரவேற்பை காவல்துறையினர் உறுதி செய்தனர். பிற்பகலில் 267வது போப்பைத் தேர்ந்தெடுப்பதற்காக, அப்போஸ்தலிக்க அரண்மனையின் பவுலின் தேவாலயத்திலிருந்து, சிஸ்டைன் தேவாலயத்திற்கு ஊர்வலமாகச் சென்றடைய கதவுகள் மூடப்பட்டன. புதிய பாப்பரசரின் தெரிவினை உலகுக்கு அறிவிக்கும் வெண்புகை வெளியேற்றம் மாலை 7.00 மணியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்பீட்டர் சதுக்கத்தில் முப்பதாயிரம் பேரும், வத்திக்கான் செய்தி யூடியூப் சேனலுடன் சுமார் ஒரு இலட்சம் பேரும் இணைந்திருந்தார்கள்.
இரவு 09 மணி 03 நிமிடத்திற்கு சிஸ்டைன் சேப்பல் புகைபோக்கியில் கரும்புகை எழுந்ததினால் புதிய பாப்பரசரின் தெரிவு இன்று நடைபெறவில்லை எனவும், இதற்கான மாநாடு நாளை வியாழக்கிழமை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.