மிகச் சிறந்த வாழ்வாதார நகரங்கள் குறித்த புதிய சர்வதேச கணக்கெடுப்பில் முதல் 10 இடங்களில், சூரிச் 7 வது இடத்திலும், ஜெனீவா 8 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
எகனாமிஸ்ட் இதழ் உலகளாவிய வாழ்வாதார அட்டவணை 2021 குறித்து நடத்திய ஆய்வில் இடம் பெற்ற உலகின் முக்கிய 140 நகரங்களிலிருந்து இந்தத் தெரிவு இடம் பெற்றுள்ளது.
கோவிட் பெருந்தொற்றுநோய் இருந்தபோதிலும், சுவிற் சர்லாந்தின் இரண்டு பெரிய நகரங்களான சூரிச் மற்றும் ஜெனிவா ஆகிய நகரங்கள், கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்ட ஐந்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டன எனக் கருதப்படுகின்றன. ஸ்திரத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு எனும் ஐந்து பிரிவுகளிலுமான திறன் செயற்பாடே இந்த தெரிவு நிலைக்கான அடிப்படையாகும்.
இது இவ்வாறிருக்க, ஜெனீவா மருத்துவர்கள் ஒரு நோய் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் அது கோவிட் -19 அல்ல. மலேரியா உள்ளிட்ட வெப்பமண்டல நோய்களின் அதிகரிப்பு குறித்து ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனைகள் (HUG) எச்சரிக்கை எழுப்பியுள்ளன.
வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள் கொரோனா வைரஸால் பீடிக்காத நிலையிலும் வெப்பமண்டல நோய்களால் பீடிக்கப்படுகிறார்கள் என அச்சம் தெரிவித்துள்ளார்கள். மலேரியா மற்றும் இதே போன்ற நோய்கள் ஆபத்தானவை என்றும், இது போன்ற நோய் தொற்றக் கூடிய ஆபத்தான ஒரு நாட்டிற்கு எந்தவொரு பயணத்திற்கும் முன்னர் ஒரு மருத்துவர் அல்லது ஒரு சிறப்பு மருத்துவ வசதியை அணுக வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.