ஐரோப்பா எங்கும் நிலவும் மோசமான வானிலையின் தாக்கங்கள் சுவிற்சர்லாந்திலும் தொடர்ந்து உணரப்படுகின்றது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழையால், சூரிச் ஏரி அதன் கரைகளை இன்று காலையில் மேவியது. அதேவேளை லூசெர்ன் ஏரியில் பெரு வெள்ளத்தை எதிர்பார்த்து பாலங்களை மூடப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் முக்கியமான லூசர்ன் ஏரி, பீல் ஏரி மற்றும் தூன் ஏரி ஆகியவை தங்கள் கரைகளை உடைக்கக் கூடும் எனும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சூரிச் ஏரி இன்று வெள்ளிக்கிழமை காலை கரையை மேவியிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை வானிலை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், வெள்ள ஆபத்து அபாயம் தொடரும் என எண்ணப்படுகின்றது.
சுவிஸின் மத்திய பகுதியில் வெள்ளம் காரணமாக சில இடங்களில் சாலைப் போக்குவரத்து மூடப்பட்டுள்ளதாகவும், மக்களை அமைதியாக இருக்கவும், வெள்ளத்தின் போது ஆபத்துக்களைத் தவிர்க்கவும் , தேவையற்ற போக்குவரத்துக்களை மேற்கொள்ளாதிருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.