கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் இத்தாலியின் வெனிஸ் கடற்பரப்பில் பெரும் சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் மிதக்கவில்லை.
சென்ற சனிக்கிழமை முதல் கப்பல் வெனிஸ் துறைமுகத்திற்கு வந்தது. இந்த மீள்வருகை, சுற்றுச்சூழல் மற்றும் நகரத்தின் கலாச்சார பாரம்பரியம் குறித்து அக்கறை கொண்ட வெனிஸ் மக்களுக்கும், சுற்றுலாத்துறைசார் அமைப்புக்களுக்குமிடையிலான முறுகலைத் தோற்றுவித்துள்ளது.
பெரும் சுற்றுலாப் பயணிகள் கப்பல்களின் வருகை, பெரிய அலைகளை ஏற்படுத்துவதாகவும், அதனால் வெனிஸ் சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிப்பதாகவும், வெனிஸின் அஸ்திவாரங்களைபாதிப்பதாகவும், எதிர்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான வெனிஸை, பாரிய கப்பல்களின் பயணிகளுக்கான தளமாகக் குறித்துள்ளது.
பெரும் கப்பல்கள் இனி வெனிஸின் சின்னமான செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தை கடந்து செல்லாது என்று மார்ச் மாதத்தில் இத்தாலிய அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த வியாழக்கிழமை 17 மாதங்களின் பின் முதல் சுற்றுலாக் கப்பல் வந்தது.
பயணக் கப்பல்களால் ஏற்படும் பெரிய அலைகள் வெனிஸின் அஸ்திவாரங்களை அரிக்கின்றன என்று நீண்டகாலமாக எச்சரித்து வரும் சுற்றுச் சூழல் ஆதரவாளர்கள், சிறு படகுகளில் ("No Grandi Navi") பெரிய படகுகள் வேண்டாம் எனும் பதாகைகளுடன் சிறு படகுகளில் வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வெனிஸ் நகரத்து வருகை தரும் 800,000 சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வரக் கூடிய சுமார் 1 பில்லியனை வெனிஸின் பொருளாதாரம் கடந்த ஒரு வருட இடைவெளியில் இழந்துவிட்டது என்று கூறிய குரூஸ் லைன்ஸ் இன்டர்நேஷனல் அசோசியேஷன் இயக்குனர் பிரான்செஸ்கோ கலியெட்டி “இந்த நகரத்தின் மறுதொடக்கத்திற்கான எங்கள் பங்களிப்பு இது " என்று பெருங் கப்பல்களின் மீள் வருகைக்கு நியாயம் கற்பித்தார்.