சுவிற்சர்லாந்தின் திச்சினோ மாநிலத்திலுள்ள பிரசித்தம் பெற்ற வாலே மாஜ்ஜா (Valle Maggia) பகுதியில் நேற்று பகல் நிகழ்ந்த தீடீர் சூறாவளியும், காற்றுடன் கூடிய பலத்த மழையும், ஏற்படுத்திய அனர்த்ததில் அப்பகுதியின் பிரதான சாலையிலமைந்த ஒரு முக்கிய பாலம் இடிந்து விழுந்ததினால் அப்பகுதிக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த இருவாரங்களுக்குள் நிகழ்ந்த இரண்டாவது பெரும் இயற்கை அழிவாகும். இதனால் பாதிக்கப்பட்ட, பவோனா, லாவிசாரா மற்றும் காம்போ பள்ளத்தாக்குகளுக்கு தரைவழியாக செல்ல முடியாத நிலையுடன், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இப்பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிக்கு வெளியிடங்களிலிருந்து மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதியில் அறிமுகமானவர்கள் இருப்பதாகக் கருதும் உறவினர்கள்/நண்பர்களின் தகவல்களுக்காக அவசர அழைப்பு எண்ணாக 0840 112 117 இலக்கத்தைக் காவல்துறை அறிவித்துள்ளது.
பாதிக்கப்ட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்களை ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றது. இதற்கான சேவைக்காக லோகார்னோ விமானத் தளத்திலிருந்து Regaவின் 6 மீட்பு ஹெலிகாப்டர்களும், Samedan தளத்திலிருந்து Rega 9 ஹெலிகாப்டர்களும் சேவைக்குடபடுத்தப்பட்டுள்ளதாக அறியவருகிறது. இப்பகுதியிலுள்ள மோக்னோவில் (லாவிசாரா) கோடைகால முகாமுக்காகச் சென்றிருந்த
நாற்பது சிறுவர்கள் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் பாதுகாபடபான பகுதிகளுக்கு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்பாடல் இன்றி தனிமைப்படுத்தப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் ஒருங்கமைப்பதற்காக வானொலியில் ஒலிபரப்பப்படும் அறிவிப்புகளை கேட்டுத் தொடருமாறு கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர். இதேவேளை துரித கதியில், மின்கம்பிகள் மற்றும் தகவல் தொடர்புகள் இரண்டையும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.