ஒரு அரசாங்கம் வேண்டுமென்றே தனது மக்களுக்கு ஒருபோதும் சிரமத்தை ஏற்படுத்தாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் தனது உரையில், நாட்டு மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை ஒப்புக் கொள்கின்றோம். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில் எமது பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்ளப் போவதில்லை.
நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில், அரசியல் ரீதியான இலாபமீட்டும் சந்தர்ப்பம் இதுவல்ல. இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான திட்டங்களை முன்வைப்பதே முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று பாராளுமன்ற வாளாகத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், 20ஐ அகற்றவும், 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்த வரைபு ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கவும் அரசாங்கம் தயார் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதனை பிராதன எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக மனோ கணேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, இன்றும் நாட்டின் பல்வேறுபகுதிகளில் சாலைமறியல் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக அறியவருகிறது.