சுவிற்சர்லாந்தில் தற்போதுள்ள கோவிட்- 19 பெருந் தொற்றுத் தொடர்பான பாதுகாப்பு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் வரும் வாரங்களில் மேலும் தளர்த்தப்படலாம் என அறியவருகிறது.
சுவிற்சர்லாந்தில் தற்போது நடைமுறையிலுள்ள, முகமூடி தேவை போன்ற குறிப்பிடத்தக்க கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள், சில வாரங்களில் நீக்கப்படலாம் அல்லது தளர்த்தப்படலாம் என்று சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஆயினும், தொற்றுநோயியல் நிலைமை மோசமடையாவிட்டால் மட்டுமே இது நடக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டார். இது தவிர தற்போதுள்ள கட்டுபாடுகளுக்கு மேலலாக, பெருநிகழ்வுகளுக்கு ஹெல்த் பாஸைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
இதேவேளை கடந்த வார இறுதியிலான 72 மணித்தியாலங்களில், கொரோனா வைரஸ் புதிய தொற்றுக்கள் கனிசமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அலுவலகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வார இறுதியில் 3,144 தொற்றுக்கள் புதிதாக பதிவாகியுள்ளதாகவும், கடந்த 72 மணி நேரத்தில் 38 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் இறப்புகள் எதுவும் இல்லை (FOPH ) புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.