சத்தமில்லாமல் சம்பவம் செய்துவிட்டு செல்பவர்களாக கருதப்படும் 'Introvert' நபர்களை சமூகத்தில் ஆதரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்
அவர்கள் அமைதியான நேரத்தை அனுபவிக்கும்போது, அவர்களைக் கௌரவிப்பதற்காக ஜனவரி 2ஆம் திகதி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது - நேற்று உலக Introvert தினமாகும்.
இந்நாள் 2011 இல் கிறிஸ்டினா ஸ்மித் என்பவரால் நிறுவப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் சத்தமில்லாத சத்தத்திலிருந்து ஜனவரி மாதத்தின் ஒப்பீட்டளவிலான அமைதிக்கு நாம் நகரும் போது, தனிமையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உள்முக சிந்தனையாளர்களின் அமைதியான வலிமை மற்றும் படைப்பாற்றலை மதிப்பதோடு; தனிமையின் மதிப்பையும் இந்நாள் எடுத்துக்காட்டுகிறது.
அதிகமாக கூட்டம் சேரும் இடங்களில் ஒதுங்கி நிற்பது, சும்மா மணிக்கணக்கில் பேசாமல்; சிந்தனையில் மூழ்குவது, நன்றாக பழகியபின்பே வெளிப்படையாக இருப்பது இப்படியான வகைகளில் Introvert நபர்கள் காணப்படுவர். ஆனால் நல்ல படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், கருத்துள்ள விடயங்களை பகிர்ந்துகொள்வதிலும் ஆர்வமுடைவர்கள். பெரியதொரு நிகழ்வை ஒருங்கிணைப்பதிலும் வல்லவர்கள், ஆனால் அதில் அவர்களை காணமாட்டீர்கள்.
இந்த நாள் introvertபற்றி மக்கள் வைத்திருக்கும் பல தவறான எண்ணங்களை அழிக்க முயற்சிக்கிறது. உள்முக சிந்தனையாளர்கள் வெட்கப்படுகிறார்கள் அல்லது சமூக ரீதியாக மோசமானவர்கள் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். இருப்பினும், உள்முக சிந்தனையாளர்கள் சமூக தொடர்பாடலுடன் இருப்பதற்கு அவர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ள தனிமை தேவைப்படுகிறது.
அதேபோல பெரும்பாலான உள்முக சிந்தனையாளர்கள், சமூக வாழ்க்கையின் அழுத்தம் மற்றும் கோரிக்கைகள் காரணமாக, தங்களைப் பற்றிய எண்ணத்தில் குறையாக உணருகின்றனர். ஆனால் தனிமையை அனுபவிப்பதிலும், தன்னைப் பற்றிய ஆழ்ந்த சுயபரிசோதனையிலும் தவறில்லை என்பதை இந்த நாள் உலகுக்கு நினைவூட்டுகிறது. இது சுய ஏற்றல் நிலையை உருவாக்குகிறது.
உலகின் தலைசிறந்த நபர்களாக நாம் கொண்டாடும் இவர்களும் உள்முக சிந்தனையாளார் என்பது உங்களுக்கு தெரியுமா?
- புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்
- செல்வாக்கு மிக்க விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன்
- ஆபிரகாம் லிங்கன்
- பேஸ்புக்கை இணைந்து நிறுவிய மார்க் ஜுக்கர்பெர்க்
- பராக் ஒபாமா
- ஹாரிபோட்டர் புகழ் ஜேகே ரௌலிங்
- முன்னாள் தொழில்முறை கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜெஃப்ரி ஜோர்டான்
ஆக ஒரு உள்முக சிந்தனையாளராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை மக்களுக்குக் கற்பிப்பதன் மூலம், ஆளுமை வேறுபாடுகள் புரிந்து கொள்ளப்பட்டு மதிப்புமிக்க ஒரு சமூகத்தை நாம் உருவாக்க முடியும்.