free website hit counter

சறுக்கினாரா வெற்றிமாறன் ?

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை ஒட்டியே வெற்றிமாறன் எடுத்து வருகிறார் என்று தகவல் வெளியாகிவருகிறது.

வெற்றிமாறனும் இதை மறுக்கவில்லை. ஆனால் அந்தச் சிறுகதை ஒரு போலியான வலதுசாரி கதை என்றும், இத்தனை காலம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து எடுத்த வெற்றிமாறன், இப்போது சறுக்கிவிட்டாரோ என்றும் நல்லெண்ணத்துடன் வலைப்பதிவர், எழுத்தாளர், சமூகஆர்வலர், எனும் பன்முகத் தன்மைகள் மிக்க சுகுணா திவாகர்  தனது முகநூலில் கடந்த டிசம்பர் மாதமே பதிவிட்டிருந்தார். அவர் எழுதிய அந்தப் பதிவை அவருக்கான நன்றிகளுடன், விடுதலை படத்தின் முதல் தோற்றம் வெளியாகியிருக்கும் நேரத்தில், வாசகர்களுக்குத் தருவது பொருத்தமாக இருக்கலாம் என்பதனால் இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4Tamilmediateam

இனி சுகுணா திவாகரின் பதிவு

Suguna Diwakar

இயக்குநர் வெற்றிமாறன் இரண்டு வகையில் முக்கியமானவர். அரசியல் சினிமாக்களைக் கலைநேர்த்தியுடன் எடுப்பவர். இயக்குநர் மகேந்திரனுக்குப்பிறகு இலக்கியங்களைத் திரைப்படமாக்கும் சவாலை வெற்றிகரமாகக் கையாள்பவர். என் 'அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்' நூலை அவருக்கும் சமர்ப்பித்திருந்தேன். சந்திரகுமாரின் 'லாக்கப்', பூமணியின் 'வெக்கை' நாவலைத் தொடர்ந்து ஜெயமோகனின் 'துணைவன்' என்னும் சிறுகதையைப் படமாக்கவிருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. இந்தமுறை வெற்றிமாறன் சறுக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

மார்க்சிய-லெனினிய இயக்கத்தைச் சேர்ந்த கோனார் என்பவரை என்கவுண்டர் செய்வதற்காக இரு காவலர்கள் அழைத்துச்செல்கிறார்கள். அவர்களுக்கிடையில் நடைபெறும் உரையாடலே சிறுகதை. நக்சலைட், என்கவுண்டர் என்னும் விஷயங்கள் வெற்றிமாறனை ஈர்த்திருக்கலாம். ஆனால் இந்தச் சிறுகதை அடிப்படையில் ஆளும் வர்க்கக் கண்ணோட்டத்தோடு கம்யூனிஸ்ட்களை இழிவு செய்வது.

 

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மா-லெ குழுக்களில் எனக்கு நண்பர்கள் உண்டு. ஆனால் ஜெயமோகன் கதையில் வரும் 'கோனார்' மாதிரியான கேரக்டரை எந்த இயக்கத்திலும் நான் சந்தித்ததில்லை. மா-லெ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கறாராக இருப்பவர்கள். தாங்கள் நம்பும் பாதையே சரியென கருதுபவர்கள். மிக மிக எளிமையானவர்கள். எல்லா விஷயங்களையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுக முயல்பவர்கள். எப்படியாவது தன் எதிரில் உள்ளவரை வென்றெடுக்க வேண்டும் என்று முயல்பவர்கள்.

ஆனால் 'துணைவன்' கதையில் வரும் கோனாரோ அப்படியான எந்த இயல்பும் கொண்டவர் அல்ல. ஏட்டிக்குப்போட்டி பேசும் நொணநாட்டியம் கொண்டவர். 'ஏழாம் உலகம்' தொடங்கிப் பல ஜெமோ கதைகளில் வரும் வழக்கமான பாத்திரத்துக்கு சிவப்புச்சட்டை மாட்டியிருக்கிறார். வடமாநிலத்தில் மா-லெ உள்பட பல்வேறு முற்போக்கு இயக்கங்களில் இருப்பவர்களும்கூட சாதிப்பெயர் தாங்கியவர்கள்தான். ஆனால் தமிழகத்தில் அப்படியில்லை. அவர்களுக்கு நிஜப்பெயர் ஒன்றும் அமைப்புப்பெயர் ஒன்றும் இருக்கும். ஆனால் எனக்குத் தெரிந்து எந்த மா-லெ இயக்கத்திலும் இப்படி 'கோனார்' என்று அமைப்புப்பெயர் சூட்ட மாட்டார்கள்.

இந்தக் கதையில் வரும் கோனாரும் மார்க்சிய அடிப்படையில் எந்த சமூகப்பிரச்னையையும் பேசுவதில்லை. காந்தி, யேசு, அன்பு மற்றும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ளும் எட்டாம் வகுப்பு மாணவன் பேசும் விஷயங்களையே பேசுகிறார். 'கோனார்' சொல்வதாகக் கதையில் வரும் வாக்கியம் இது.

"அதிகாரம் துப்பாக்கிக் குழாய் வழியான்னுதானே மார்க்ஸ் சொல்றார்…”
உண்மையில் இதைச் சொன்னது மார்க்ஸ் அல்ல, மாவோ. 'துப்பாக்கிக் குழலில் இருந்துதான் அதிகாரம் பிறக்கும்' என்னும் வரிகள் மா-லெ இயக்கத்தில் பலமுறை மேற்கோள் காட்டப்பட்ட வரிகள். இந்திய நக்சல்பாரி இயக்கம் மாவோவின் தாக்கத்தால் உருவானது. மார்க்ஸுக்கும் மாவோவுக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு கூமுட்டை மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் இருப்பது ஜெயமோகன் சிறுகதையில் மட்டும்தான் சாத்தியம்.

இந்தக் கதை நக்சல்பாரிகள் பற்றிக் காட்டும் சித்திரம் இதுதான். அவர்கள் போலீஸ்காரர்களை இரக்கமற்றுக் கொல்வார்கள். மா-லெ இயக்கங்களுக்குள் கருத்துமுரண்பாடுகள் வரும்போது அம்மா, ஆத்தா என்று வசைபாடுவார்கள். அவர்களுக்குள் ஆயுதமோதல்களும் சகோதரப்படுகொலைகளும் நிகழும்.
மா-லெ குழுக்களுக்குள் கடுமையான கருத்துமுரண்கள் உண்டு. இந்தியச் சமூகத்தை எப்படி வரையறுப்பது என்பதில் தொடங்கி புரட்சி நடைபெறும் முறை, தலைமை தாங்கும் வர்க்கம், சாதி, மதம், தேசிய இனப்பிரச்னைகள் ஆகியவை குறித்து தீவிரமான கருத்துமுரண்பாடுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மார்க்ஸ், லெனின், மாவோ மேற்கோள்களை வைத்து மேற்கோள் யுத்தங்கள் நடப்பதுண்டு. ஆனால் இந்தக் கதையில் சித்திரிக்கப்படுவதைப்போல 'அம்மா, ஆத்தா' என்று அவர்கள் வசைபாடுவதில்லை.

அழித்தொழிப்பை வழிமுறையாகக் கொண்ட நக்சல்பாரி இயக்கம் பல்வேறு குழுக்களாகச் சிதறுண்டுபோனது. அதில் பெரும்பாலான மா-லெ குழுக்கள் ஆயுதப்பாதையை ஒத்திவைத்துவிட்டு மக்கள்திரள் பாதைக்கு வந்தன. லிபரேஷன் போன்ற சில மா-லெ அமைப்புகள் தேர்தல்களிலும் பங்கேற்கின்றன. ஈழத்தில் நடந்ததைப்போல மா-லெ குழுக்களுக்குள் சகோதரப்படுகொலைகள் பெரிதாக நடந்ததில்லை, அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில்.

 

இந்தக் கதை எழுதப்பட்ட காலகட்டத்தில் மக்கள் யுத்தக்குழு, மாவோயிஸ்ட் சென்டர் என்ற இரு அமைப்புகள் மட்டுமே ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. பிறகு இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து 'மாவோயிஸ்ட் கட்சி'யாக உருப்பெற்றது. தமிழகத்தில் மா-லெ இயக்கத்திலிருந்த தோழர்.தமிழரசன் அதிலிருந்து விலகித் தமிழ்த்தேசியத்தை ஏற்று 'தமிழ்நாடு விடுதலைப்படை'யை உருவாக்கினார். தமிழரசன் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டு விடுதலைப்படையில் குழுமோதல்கள் நடந்ததும் சில கொலைகள் நடந்தன என்பதும் உண்மைதான். ஆனால் இதை மா-லெ இயக்க சகோதரப்படுகொலைகள் என்று அடையாளப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. மேலும் 'துணைவன்' கதையில் வரும் 'கோனார்' இந்தியப் புரட்சியை ஏற்றுக்கொண்டவர்.
எல்லாவற்றையும் விட ஜெயமோகன் கம்யூனிஸ்ட்களை எவ்வளவுதூரம் கொச்சைப்படுத்தியிருக்கிறார் என்பதற்குக் கீழ்க்கண்ட வரிகளே சாட்சி.

என்கவுண்டர் செய்வதற்கு முன் ஒரு போலீஸ், 'நீ தப்பிச் செல்ல வேண்டியதுதானே?' என்று கேட்கிறார். அதற்கு 'கோனார்' சொல்லும் பதில் இது. /“ஓடலாம். ஆனா எப்டியும் இந்த வருசத்துக்குள்ள எங்க எதிர்கோஷ்டிங்க என்னை கொன்னிருவாங்க. ,என்ன? அது எனக்கு கேவலம். என்ன? போலீஸ் சுட்டு நான் செத்தாத்தான் எனக்கு மதிப்பு. நான் சாகவேண்டிய விதம் அதுதான்… எங்கியாம் எனக்கு ஒரு நினைவுசின்னம் வைப்பாங்க. ஆண்டுதோறும் ஒண்ணுரெண்டு அஞ்சலிக்கட்டுரை எழுதுவாங்க… அதுக்காகத்தான் இவ்ளவு பாடுபட்டேன்… ,என்ன? அதான் சரியான முடிவு” என்றார் கோனார்./
- வன்மமும் வெறுப்பும் நிறைந்த ஒரு வலதுசாரி எழுத்தாளனால் மட்டும்தான் இத்தகைய அவதூறு வரிகளை எழுத முடியும்.
தமிழாசிரியராக இருந்து நக்சலைட்டாக மாறியவர் கோனார். அவரிடம் ஒரு திருக்குறள் சொல்லச்சொல்லிக் கேட்கிறார் காவலர்.
/“துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு துப்பாயதூம் மழை” என்றார் கோனார் “நல்ல பாட்டு இல்ல? அந்தக்காலத்திலேயே துப்பாக்கியப்பத்தி பாடியிருக்கார்”/

இப்படியான கொடூர நகைச்சுவைகளும் இந்தக் கதையில் உண்டு. வெற்றிமாறனைப் பொறுத்தவரை ஒரு சிறுகதையையோ நாவலையோ அப்படியே படமாக எடுப்பவரல்ல. அதைச் செழுமைப்படுத்தி அதற்கொரு இணைக்கதையோ பின்கதையோ இணைத்து கலைப்படைப்பாக உருவாக்குபவர். இந்தக் கதையையும் நக்சல்பாரி செயற்பாட்டாளரின் அரசியல் வாழ்க்கைப்பின்னணி, என்கவுண்டருக்குப் பின்னுள்ள அரசியல் ஆகியவற்றை இணைத்துத்தான் படமாக்குவார் என்று கருதுகிறேன். ஆனால் அதற்கான கதையல்ல இது.

ஏற்கெனவே 'அசுரன்' படத்தில் திருநெல்வேலியில் பஞ்சமி நிலம் இருந்ததாகக் காட்டப்பட்டதும் கம்யூனிஸ்ட்கள் பஞ்சமி மீட்புப் போராட்டம் நடத்தியதாகக் காட்டப்பட்டதும் தவறான தகவல்கள் என்பதைப் பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இப்போது அவர் படமாக்கத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொல்லப்படும் இந்தக் கதையோ வன்மமும் வரலாற்றுத்தகவல் பிழைகளும் நிரம்பிய கதை.

 

நக்சல்பாரிகளின் அரசியல் வாழ்க்கையையும் என்கவுண்டருக்குப் பின்னுள்ள அரசியலையும் சொன்ன ராமச்சந்திரன் நாயரின் 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி', குளச்சல் முகம்மது யூசுப் மொழிபெயர்த்த 'நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள், பாட்டாளியின் 'கீழைத்தீ', பாரதிநாதனின் 'தறியுடன்' என்று தமிழில் அசலாகவும் மொழிபெயர்ப்பாகவும் கணிசமான நூல்கள் உள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction