இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுகளை பெறும் 119 பேரில் கர்நாடக பழங்குடியினரான துளசி கவுடா அவர்களும் ஒருவர்.
விருது விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் துளசி கவுடா அவர்களின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு இன்றைய பேசும் படமாகியுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி கௌரவிக்கும் பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இம் முக்கிய விழாவில் பத்மஸ்ரீ விருது பெறும் தகுதியுடையவர்களாக அடையாளப்படுத்தப்படும் 119 பேரில் கர்நாடகாவின் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்த துளசி கவுடாவும் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டார். சுற்றுச்சூழலுக்காக ஆறு தசாப்தங்களாக உழைத்து 30,000 மரக்கன்றுகளை நட்டு வனத்துறையின் நாற்றங்கால்களை கவனித்து வரும் துளசி கவுடா ஹலக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
77 வயதாகும் இவர் தாவரங்கள் மற்றும் மூலிகைகள் பற்றிய தனது முடிவற்ற அறிவின் காரணமாக 'காடுகளின் கலைக்களஞ்சியம்' என புகழ்பெற்றவர்!
விழாவில் பெருமைக்குரிய துளசி கவுடா அவர்கள் பிரதமர் உள்ளிட்டோர்களை இருகரம் கூப்பி வணங்க அவரை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைகூப்பி வரவேற்ற புகைப்படம் பிரதமரால் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. அத்துடன் கைகளைப் பற்றிக் கொண்டு அவருடன் பிரதமர் பேசும் புகைப்படமும் இணைக்கப்பட்டது. ட்விட்டரில் பலர் இதை "இன்று பேசும் படம்" என்று தலைப்பிட்டு பகிர்ந்துவருகின்றனர். தன்னலமற்ற சமூகப்பணிக்காக ஸ்ரீமதி துளசி கவுடாவுக்கு பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.
கர்நாடகாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த துளசி கவுடா தனது இரண்டு வயதில் தந்தையை இழந்தார். மிகச் சிறிய குழந்தையாக, அவர் தனது தாயுடன் உள்ளூர் நர்சரியில் வேலை செய்யத் தொடங்கினார். பள்ளிக்குக்கூட செல்லாத துளதி கவுடா அவர்கள் தன்னை ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக அர்ப்பணித்துக்கொண்டவர்.
இன்றுடன் புகைப்படங்களுடன் மட்டும் பேசி முடிக்கவேண்டிய புகைப்படங்கள் அல்ல இவை; தொடர்ந்து பேசவும் வைத்துள்ள புகைப்படங்கள் அவை!
Source: PIB/ NDTV