இந்தப் படத்தையும், 15 வயதான ஜோதி என்கின்ற இந்தப் பெண்ணையும் அவ்வளவு எளிதாக நீங்கள் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டு, இந்திய ஒன்றிய அரசால் திடீரென்று அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய லாக்டவுன் பல அசலான கதாநாயகிகளையும் கதாநாயகர்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியது. அவ்விதம் உலகுக்கு அறிமுகமானவள்தான் இந்தப் பெண்.
குடும்பத்தைக் காப்பாற்ற பீகாரிலிருந்து 1200 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள ஹரியானா மாநிலம் குருகிராம் தொழிற்பேட்டையில் வேலை செய்து வந்தார் ஒடுக்கப்பட்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 52 வயது மோகன் பாஸ்வான். லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரத்தில் விபத்தொன்றின் சிக்கி கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் நடக்க முடியாத நிலை. லட்சக் கணக்கான ஏழைத் தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே தங்களுடைய கிராமங்களுக்கு வந்தார்கள். ஆனால், மோகன் பாஸ்வானால் வர முடியவில்லை.
ஆனால், காலில் காயம்பட்ட தன்னுடைய தந்தையை, தன்னுடைய மிதி வண்டியின் பின்னால் அமர வைத்து, ஹரியானாவின் குருகிராமில் இருந்து, பீகாரின் தர்பங்காவுக்கு 1200 கிலோ மீட்டர்கள் தூரத்தை தன்னுடைய பிஞ்சுப் பாதங்களின் பலத்துடன் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ந்தாள், அவருடடைய 15 வயது மகள் ஜோதி குமாரி. இந்தியாவின் மகள் என்றும் ‘சைக்கிள் கேர்ள்’ என்று ஊடகங்கள் கொண்டாடிய அந்த ஜோதி தற்போது பெரும் துயரில் அழுது கொண்டிருக்கிறாள்.
அரும்பாடுபட்டு அழைத்து வந்த அவளது தந்தையை தற்போது ஜோதி இழந்துவிட்டாள். கோரோனா ஊரடங்கு காலத்தில், தன்னுடைய தந்தை மீது அன்பும் நம்பிக்கையும் வைத்து அவரை அழைத்து வந்த ஜோதிக்கு காலம் பெரும் சோதனையைத் தந்துவிட்டது. மோகன் பாஸ்வான் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். ஜோதியின் தியாக உள்ளத்தை எடுத்துக்காட்டும் விதமாக, அவரையே நடிக்க வைத்து ‘ஆத்மனிர்பர்’ (தன்னம்பிக்கை) என்ற தலைப்பில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் தயாரிக்க சிலர் முன் வந்ததும் இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.
-4தமிழ் மீடியாவுக்காக: மாதுமை