எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசையில் அன்பே வா திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாடல் 1966 இலிருந்து பிரபலமாகி வந்தது.
இப்போது சமூக வலைத்தள ரீல்ஸ் இல் மீண்டும் பிரபலமாகிவருகிறது; அப்படி அப்படியே; அல்ல கொஞ்சம் இப்படி இப்படி!
டிஜே இசைக்கலைஞரால் இசைசேர்க்கை செய்யப்பட்டு மாறுபட்ட இந்த இசைக்கலவை, ரீல்ஸ் செய்யும் இளசுகளுக்கு என்னமோ பொருந்துகிறது. பொறுத்துக்கொண்டு முழுமையாக கேட்கதான் பொதியாய் கனக்கிறது. பொறுமையாக இது பற்றி மேலும் தேடியதில் பொருத்தமாக ஒரு பழைய 'சங்கதியையும்' பொறுக்கி எடுத்தேன்.
இசைக்கலைஞரான விமல் பெர்சி என்பவர் தனது யூடியூப் சேனலில் இசைக் கல்வியை பயிற்றுவித்து வந்துள்ளார். ஒருதடவை இதே 'ராஜாவின் பார்வை' பாடலை சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா பாணியில் எப்படி வாசிக்கலாம் என்பதை வெளியிட்டுள்ளார். இதற்கு பொருந்தக்கூடிய ஆர்கெஸ்ட்ரா இசைக்கும் அமெரிக்க இசைக்கலைஞர்களின் காணொளியை பயன்படுத்தியும் உள்ளார்;
இந்தப் பாடலை சிம்பொனி பாணியில் மீண்டும் உருவாக்க முயற்சித்ததாகவும், இசையை முழுமையாக்க சில காட்சிகள் மற்றும் ஆர்கெஸ்ட்ரா வீடியோக்களைச் சேர்த்ததாகவும், இருப்பினும் இதனை உண்மையாக இந்த ஆர்கெஸ்ட்ரா குழு வாசிக்கவில்லை என கணொளியின் கீழே விளக்கத்தையும் கொடுக்கத் தவறவில்லை.
ஆனால் நடந்தது வேறு! சமூக வலைத்தளங்களில் அமெரிக்க ஆர்கெஸ்ட்ரா இசைக்குழு இசைக்கும் 'ராஜாவின் பார்வை' பாடல் எனும் பொய்க்குறிப்புடன் காணொளியை வேறுயாரோ சிலர் பரவலாக்கிவிட்டனர். ஒளியும் ஒலியும் பொருந்திப்போக காணொளி வைரலாகிப்போனது.
உண்மை வெகுநாள் பொறுமை காக்கவில்லை. உண்மைத்தன்மையை கண்டறியும் இணைத்தளங்கள் பொய்க்கும், உண்மைக்கும் பொருத்தம் பார்த்து பொரிந்து தள்ளியது.
நொந்துபோனது என்னமோ விமல் பெர்சிதான். பின்னர் மக்களை தவறாக வழிநடத்துவதைத் தவிர்ப்பதற்காக கணொளியின் கீழ், காட்சிகளை மங்கலாக்கினேன் எனும் விளக்க குறிப்புடன் அவரது சேனலில் இந்தப்பாடலை பார்வையிடலாம்.
இணையவெளி "ராஜாக்கள்'' பார்வையை எந்தப்பக்கமும் திருப்பி ஆள முயற்சிக்கலாம்! அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் உலாவினால் நாம் பூமி ஆளலாம்.
டிஜே இசைக்கலைஞரால் இசைசேர்க்கை செய்யப்பட்ட பாடல்
சிம்பொனி பாணியில் மீண்டும் உருவாக்க முயற்சித்த பாடல்