உலக சினிமா விருது விழாக்களில் மிகவும் பிரபலமானது ஆஸ்கார் விருது. இந்த ஆண்டு நடைபெற்ற விருதுவிழா, வித்தியாசமான வகையில் கவனம் பெற்றுள்ளது. இந்த ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான விருதுபெற்ற வில் ஸ்மித்தின் மனைவியும், நடிகையுமான ஜடா பிங்கெட் ஸ்மித்தை, அவர் தலைமுடியை வைத்து உருவக்கேலி செய்தார்.
இதனை ஆரம்பத்தில் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும், தனது மனைவியின் மனதை வருந்தச் செய்யும் ராக்கின் உரையினால் எரிச்சல் அடைந்த வில் ஸ்மித், நேரே மேடைக்குச் சென்று கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். ஆஸ்கர் மேடையில் நடந்த இந்தச் சம்பவம் உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நகைச்சுவை என்னும் பெயரில் உருவக்கேலி செய்வது கண்டிக்கத் தக்கது. ஆஸ்கார் விருது விழாவில் வில்ஸ் ஸ்மித் அடைந்த கோபத்தைவிடவும் அவர் தன் மனைவியின் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பும், மதிப்பும்தான் கூடுதலாக வெளிப்படுகிறது என வில்ஸ் ஸ்மித்துக்கு ஆதரவானோர் சமூக ஊடகங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றார்கள். ஊடகங்களிலும் இந்தச் செய்தி விவாதப் பொருளாகியுள்ளது.
இந்நிலையில், என்னதான் ஆத்திரமூட்டும் உரையாக இருந்த போதிலும் பொது நிகழ்வொன்றின் நேரலையில் ஸ்மித் இவ்வாறு நடந்திருக்கக் கூடாது. அவரை பின்தொடரும் பலருக்கு வன்முறையான முன்னுதாரணத்தைக் காட்டியிருக்கின்றார். மாறாக அதே மேடையில் இதனை கருத்தாகச் சொல்லியிருந்தால் அது பலருக்கும் நல்லவிதமாகச் சென்றிருக்கும் என எதிர்வினைக் கருத்துக்களும் எழுந்துள்ளன.
வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றபின், தனது துயரங்கள், குடும்பம், மனைவியின் இயலாமை அதன் மீதான உருவக்கேலித் தாக்குதல் என கண்ணீருடன் உரையாற்றினார். ஆஸ்கார் விருது வரலாற்றில் கவனிக்கப்படும் பல்வேறு உரைகளில் ஒன்றாக அது இருக்கும். நிறைவாக அவர் விழாக் குழுவிடமும் தனது நாமினிகளிடமும் இந்தச் செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கார் விருது மட்டுமல்ல வில்ஸ்மித்தின் ஆஸ்கார் அடியும் இனிப் பிரபலம்தான்.