free website hit counter

ரோகிணி கொரோனாவிலிருந்து மீண்ட கதை இது!

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகையும் சமூகச் செயற்பாட்டாளரும் மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியுமான ரோகினி கோரோனாவின் தீவிரத் தொற்றுக்கு ஆளானார்.

அவர், தான் சாவிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தை தன்னுடைய சமூகவலைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது அனுமதியுடன்  அவரது பகிர்வு:

இன்றுவரை இதை எழுதும் மனநிலையில் இல்லாமலிருந்தேன். ஆனால் பலரின் மருத்துவமனை அனுபவங்கள் வாசித்தபோது மௌனம் பாலிக்க இயலவில்லை. 27ஆம் தேதி எனக்கு கோவிட் பாசிட்டிவ் என்று வந்தது. இருமல், காய்ச்சலுடன் துவங்கியது. மூன்று நாட்கள் காய்ச்சலுக்கு மருந்தும், ஆவி எடுப்பது, நல்ல உணவு, கபசுரக்குடிநீர் என பார்த்தேன். மருத்துவர் கு. சிவராமன் 1 ஆம் தேதி சி. டி ஸ்கேனும் ரத்த பரிசோதனையும் செய்ய சொன்னார். சில அளவுகள் ஏறுமுகமாக இருந்தது தெரியவந்தது. மூன்றாம் தேதி மூச்சு எடுப்பதில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. கொரோனா வந்த நேரத்திலிருந்தே இப்படியொரு நிலமை வந்தால் என்ன செய்வது என்று நான் மற்றவர்களின் அனுபவங்கள் கவனித்து மனதில் முடிவு செய்து வைத்திருந்தேன். ஏனென்றால் எனக்காக முடிவெடுக்கும் என் உறவினர்கள் யாரும் சென்னையில் இல்லை.

போன வருடம் பிரளயன் தோழர், கே. பி தோழர் அரசு மருத்தவமனையில் சிகிச்சைப்பெற்று குணமடைந்து வந்ததும், சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் உள்ள ஒரு நண்பருக்காக ஒரு இஞ்சக்ஷன் வேண்டுமென்று சு. வெங்கடேசன் தோழரிடம் கேட்டபோது அரசு மருத்துவ மனையில் சேர்த்துவிட்டால் அங்கே இந்த மருந்துகளும், ஆக்சிஜனும் தட்டுப்பாடில்லாமல் சிகிச்சை அளிக்கப்படும் என்றார். இவையனைத்தையும் மனதில் வைத்து, மருத்துவமனை போகவேண்டிய சூழல் வந்ததும் பிரளயன் தோழரின் உதவியால் கனிமொழி நேரடியாக பேசி கிண்டி கோவிட் சென்டரில் 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டேன்.

பிரளயன் தோழர், சு. வெங்கடேசன் தோழர், செல்வா தோழர், ஆதவனின் உறவினர், R.Balakrishnan தோழர், பாரதி தமிழன் இன்னும் எத்தனையோ தோழர்களின் கண்காணிப்பில் எனக்கு சிகிச்சை நடந்தது. முதல் இரண்டு நாள் எழுந்து உணவருந்துவதும் கடினமாக இருந்தது. குப்பறப்படுத்தால் மட்டுமே மூச்சு எடுக்க தோதாக இருந்தது. டாக்டர் நாராயணசாமி

உங்களுக்கு முதல் கிரேட் இன்பெக்‌ஷன்தான் இதைவிட மோசமாக இருந்தவர்களை நாங்கள் குணமாக்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டோம் என்று சொன்னார். நாங்கள சொன்னதுபோல் குப்புறப்படுத்து, உணவும், மனம் தளராமல் தைரியமாக இருந்தால் குணமாகி விடுவீங்கன்னு உற்சாகப்படுத்தினார்.
காலையும் மாலையும் உயிர்காக்கும் மருந்து செலுத்தப்பட்டன. அரைமணி நேரத்திற்கு ஒருமுறை செவிலியர்களும், மருத்துவர்களும் வந்து பார்த்தார்கள் ஒவ்வொரு முறையும் அவர்களின் காலோசைக்காக காத்திருந்தேன். அவர்களின் கண்களை நினைவு வைத்துக்கொள்ள முயன்றேன். என்றாவது இந்த கண்கள் தென்பட்டால் கட்டியணைத்து முத்தமிடும் வரம் வேண்டினேன்.

ரிஷியின் ஒரு அலைபேசி அழைப்பையும் தவறவிடாமல் எடுத்தேன். வீட்டிற்கு திரும்பி வந்ததும் என்னைப்பார்த்து நாங்கள் தத்தெடுத்த நாய்குட்டி கிளியோ எப்படி என்மேல் பாயும் என்று பேசினோம். மே 17ஆம் தேதி துவங்கும் அவனது ஆன்லைன் வகுப்புப் பற்றி சொல்வான். தோழர்கள் அவனை அழைத்து பேசினதை சொல்வான். அவனையும் தங்கள் அணைப்பில் வைத்துக்கொண்டதை உணர்ந்த நொடி நான் கண்ணீர் விட்டு அழுதேன்.
செல்வா தோழர் மூலமாக பழமும், beef சூப்பும் தினமும் வரும்.

பிரளையன் தோழரிடம் கேட்டுக்கொள்ளுங்கள், இதுதான் என் அண்ணனிடமும் நான் சொன்ன பதில். அவர்தான் ஒவ்வொரு நிமிடமும் என்னை கண்காணித்தார், தைரியம் தந்தார் எல்லா ஏற்பாடுகள் செய்தார். நன்றி எனும் வார்த்தை மட்டுமே போதாது என்று தெரியும். ஆனாலும் நன்றி பிரளையன் ??
மூன்றாவது நாளும் மூச்சு சீராகததினால் இன்னொரு மருந்தும் செலுத்தப்பட்டது. உலகத்தில் கோவிட்காக கொடுக்கப்படும் மருந்து அனைத்தும் கொடுத்தோம், இனி சரியாக வேண்டும் என்றார் நாராயணசாமி. சரியானது. 5ஆம் நாள் வீட்டுக்கு வந்தேன். என்னை மீட்டு பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் கோடானுகோடி நன்றி. எப்படி அவர்களின் இந்த சேவைக்கு கைமாற்று செய்யமுடியும். அவர்களை நினைக்கும்போதெல்லாம் கண்ணீரில் நனைந்த என் இதயம் அன்பாகிறது. நன்றி நன்றி நன்றி.

வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும், திரும்பி வீட்டுக்கும் செல்வராஜ் எனும் தோழரின் ஆட்டோவில் தான் வந்தேன். இன்றுவரை அந்த சாலைகளை நான் சென்னையில் பார்க்கவில்லை. அந்த பாதையின் எல்லை எதுவென தெரியாத வெறுமை. முடிக்கவேண்டிய திரைப்பட வேலைகளும் அவர்களின் நிலையும் அடிக்கடி நினைவு வந்தன. என் ரிஷி? அவன் மிக முதிர்ச்சியுடன் பேசினான் என்று தோழர்கள் சொன்னார்கள். ஆனாலும் அவனுடன் இன்னும் எத்தனையோ காலம் இருக்க ஆசை.

இப்பொழுது ஒரு மடக்கு தண்ணீரில் வாழ்வின் ருசியை உணர்கிறேன். அனைத்து கோபங்களையும் களைந்துவிட்டேன். இவையனைத்தும் சமீபகாலமாக பலருக்கு உண்மையானாலும், அவற்றை நாம் உணர்ந்தமாதிரி பேசினாலும் நிஜமாகவே நமக்கு வந்தாதான் மனம் மாறுகிறது. இங்கே முக்கியமாக சொல்லவந்தது, பிரபலமானதினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெறுவது இழுக்கல்ல. தனியார் மருத்துவமனையில் மருந்துக்கு அலையவேண்டும், அந்த நேரத்தில் பணமிருந்தாலும் கையாலாகாத நிலையில் தள்ளப்படுவோம். எனக்கு முன்பே இன்னொரு திரை பிரபலமும் அங்கே நலம்பெற்று போனார்.
வராமல் இருக்க எல்லா முயற்சியும் எடுங்கள், வந்தால் தேவைப்பட்டால் அரசு மருத்துவமனையை நாடுங்கள்.

இதுவரை பலநேரங்களில் நான் தனியாக உணர்ந்தேன் ஆனால் இப்பொழுது என் தோழர்கள் என்னுடன் இருப்பதை உணர்கிறேன். இது எவ்ளவு பெரிய பலமாக இருக்கு என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நாங்கள இணைந்து செய்யவேண்டிய வேலைகள் இன்னும் தெளிவாகின.
வாழ்தல் இனிது.

மிகுந்த நெகிழ்வுடன்
ரோகினி - Rohini Molleti

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction