பூக்கள் மலர்ச்சியின் மகிழ்ச்சியின் அடையாளம். பூக்கள் என்றதும் எமக்கு சில பெயர்கள் எப்போதும் நினைவுக்கு வரக்கூடியவை எக் காலத்துக்குமான ரோஜா, பிரகாசமான சூரியகாந்தி மற்றும் கம்பீரமான துலிப், வாசமான மல்லிகை என்பன.
ஆனால் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பிரபலமானதும், வரலாறு கொண்டதுமான மலர்களில் ஒன்று பியோனிஸ் ( Peonies ).
பியோனிஸ் மலருக்கு நீண்ட வரலாறும், சிறப்பும், உள்ளது. பியோனிஸ் பூவின் பெயர் பண்டைய கிரேக்க புராணங்களில் உருவானது. புராணக்கதையின்படி, பண்டைய கிரேக்க மருத்துவக் கடவுளான அஸ்க்லெபியஸின் மருத்துவ மாணவரும், நோய்களைக் குணப்படுத்துபவருமாக இருந்தவர் பியோன். நோய்களைச் சிறப்பாகக் குணப்படுத்தியதன் மூலம், அஸ்க்லெபியஸைக் கோபப்படுத்தினார். ஆத்திரமும், பொறாமையும் அடைந்த அஸ்க்லெபியஸ், பியோனைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார். கடவுள்களின் ராஜாவான ஜீயஸ், பியோனி என்று அழைக்கப்படும் ஒரு பூவாக மாற்றி, பியோனின் உயிரைக் காப்பாற்றினார் என்பது பியோனிஸ் பூவுக்கான கிரேக்க புராணத்தின் கதை.
ஆனால் கிரேக்கத்துடன் முடிந்து விடவில்லை பியோனி மலரின் வரலாறு. பண்டைய கிரீஸ் முதல் சீனா வரை, அதன் வரலாறு நீண்டுள்ளது.
பியோனிஸ் மலர்களின் நோய்களைக் குணப்படுத்தும் புகழ் வளர்ந்ததன் விளைவாக சீனாவின் தேசிய சின்னமாக மாறியது. ஏற்கனவே அதற்கான நற்பெயருடன், சீன மக்களுக்கு செல்வம், வெற்றி, கருணை மற்றும் கண்ணியத்தின் அடையாளமாக அறியப்பட்டது. 1988 இல், சீனர்கள் ஜப்பானுடனான நட்பைக் குறிக்கும் வகையில் தபால் தலைகளின் தொகுப்பை வெளியிட்டனர், அங்கு ஒரு பியோனி மலர் செர்ரி மலருடன் இருந்தது, செர்ரி மலர் ஜப்பானின் தேசிய சின்னமாகும்.
பியோனி மலர்கள், அவற்றின் செழுமையான தோற்றம் மற்றும் மரியாதைக்குரிய நற்பெயர் காரணமாக, உலகம் முழுவதும் ஒரு உறுதியான விருப்பமான அலங்கார மலர்களாக மாறியுள்ளன.
இன்றுவரை, சீனர்களால் பியோனிகளுக்கு வழங்கப்பட்ட, வெற்றி, கருணை மற்றும் கண்ணியம் நம்பிக்கை, விசுவாசம், நல்ல ஆரோக்கியம், நிதி வசதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுடனான நற்பெயர் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளதன் காரணமாக, திருமண வைபவங்களிலும், திறப்புவிழாக்களிலும், பியோனிகள் விருப்பமான அலங்காரப் பூக்களாக மாறிவிட்டன.