free website hit counter

ஓடிடி - ஆஹாவென எழும் திரைப்புரட்சி - 2

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஓடிடி என சொல்லப்படுவதை மிக எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் எனில், இணையம் வழியே திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடரை பார்ப்பது என புரிந்து கொள்ளலாம். அல்லது நெட்பிளிக்ஸ் போன்ற சேவைகள் மூலம் படம் பார்ப்பது என குறிப்பிடலாம்.

ஆனால், இதை இணைய சினிமா என்றே குறிப்பிடலாமே. ஏன், சுற்றி வளத்து ’ஓவர் தி டாப்’, என குறிப்பிட வேண்டும் ?

2. ஸ்டிரீமிங் அறிவோம் !

ஓடிடி என சொல்லப்படுவது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல. இணையத்தின் வருகைக்கு பிறகு உள்ளடக்கத்தை பெறுவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அது உணர்த்துகிறது. உண்மையில் ஓடிடி என்பது, இணையம் வழியே படம் பார்ப்பது மட்டும் அல்ல. அதன் விளக்கத்தில் இன்னொரு முக்கிய பகுதியும் இருக்கிறது. கேபிள் இணைப்பு அல்லது செயற்கைகோள் இணைப்பு போன்ற மரபான வழிகளுக்கான தேவையில்லாமல், இணையம் வழியே நேரடியாக உள்ளடக்கத்தை அணுகுவதாக இது அமைகிறது.

இந்த விளக்கத்தின் வால் பகுதியாக, தரவிறக்கம் ( டவுண்லோடு) செய்யும் தேவையில்லாமல், நேரடியாக படம் பார்ப்பது அமைகிறது. இந்த அம்சங்களின் முக்கியவத்துவமே, ’ஓவர் தி டாப்’ என சொல்ல வைத்துள்ளது. இதுவரை அறியப்பட்ட பாரம்பரிய விநியோக வழிகளுக்கு மேல் நிகழும் உள்ளடக்க விநியோகம் என்றும் இதை புரிந்து கொள்ளலாம். இணையம் மூலம் இடைத்தரகர் பொருட்களை வாங்குவது போன்றதே இது.

ஓடிடி என்பது ஒரு தொழில்நுட்ப உத்தி. ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை, இணையம் வழியே பயனாளிகள் நேரடியாக அல்லது உடனுக்குடன் பார்ப்பது இதன் மூலம் சாத்தியமாகிறது. ஓடிடி வசதியை தனியே பார்க்காமல், வி.ஓ.ஐ.பி (VoIP - voice over IP) எனப்படும் இணைய வழி தொலைபேசி அல்லது ஐபி.டிவி (IPTV) எனப்படும் இணைய தொலைக்காட்சியுடன் பொருத்திப்பார்ப்பதும் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமான வானொலியின் இணைய நீட்டிப்பான பாட்காஸ்டிங்குடனும் இதை இணைத்து பார்கலாம்.

பல்வேறு துறைகளில், வழக்கமான விநியோக முறையை தகர்த்து புதிய பாதை அமைத்து தந்திருப்பதன் அடையாளமாக ஓடிடி அமைகிறது. ’ஆன் டிமாண்ட்’ என சொல்லப்படும் விருப்பத்தேவை அடிப்படையில் உள்ளட்டகத்தை பெறுவதன் சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது. நிலையான நல்ல இணைய தொடர்பு இருந்தால் போதும், பயனர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அல்லது திரைப்படத்தை அல்லது இணையத்தொடரை நேரடியாக பார்த்து ரசிக்கலாம் எனும் வாய்ப்பை ஓடிடி கொண்டு வந்துள்ளது.

ஓடிடியின் சாத்தியங்களை புரிந்து கொள்ள வேண்டும் எனில், அதன் பின்னே உள்ள ஸ்டிரீமிங் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டிரீமிங் என்பதை தமிழில் ஊடக ஓடையாக்கம் என கொள்ளலாம். இன்னும் கவித்துவமாக சொல்வது எனில் உள்ளட்டக்கம் எண்மத் துகள்களாக (Bits) பாய்ந்தோடி வருவது என வர்ணிக்கலாம்.

ஆம், ஸ்டிரீமிங் என்பது, வீடியோ உள்ளிட்ட உள்ளடக்கம், தங்கு தடையில்லாமல் பயனர் சாதனத்திற்கு பாய்வதை குறிக்கிறது. வீடியோ உள்ளடக்கம் இணைய பரிமாற்ற வழக்கப்படு சிறு சிறு பாக்கெட்களாக பிரிக்கப்பட்டு, அந்த பாக்கெட்கள் இணையம் வழியே பயனர் சாதனத்திற்கு வந்து சேர்வதன் மூலம் இது நிகழ்கிறது.

தரவிறக்க முறையில் வீடியோ கோப்புகளை பார்க்கும் முறையில் இருந்து இது வேறுபட்டது. தரவிறக்கம் செய்யும் போது, முதலில் ஒட்டுமொத்த கோப்பையும், பயனர் கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்து முடித்த பிறகே அந்த கோப்படை ஓட விட்டு பார்க்க முடியும். இதற்கு மாறாக, ஸ்டிரீமிங் எனும் ஓடையாக்கத்தில், கோப்புகள் வரத்துவங்கும் போதே அவற்றை பார்க்கத்துவங்கலாம். கம்ப்யூட்டரில் அவை சேமிக்கப்படுவதில்லை.

வீடியோ கோப்பின் முதல் சில துகள்கள் வந்து சேரும் போது, அது பயனர் சாதனத்தில் ஓடத்துவங்குகிறது. இதனிடையே அடுத்த சில துகள்கள் வந்து சேருகின்றன. இப்போது, முதலில் ஓடிய துகள்கள் டெலிட் செய்யப்பட்ட, புதிதாக வந்த துகள்கள் ஓடுகின்றன. இதற்குள் அடுத்த கட்ட துகள்கள் வந்து கொண்டிருக்கின்றன. உள்ளடக்கம் பெறப்படும் போதே பார்க்கப்படுவது, உள்ளடக்க கோப்பின் ஒரு பகுதி முன்னதாகவே வந்து சேர்ந்து தயாராக இருக்கும் நிலையில் தொழில்நுட்ப மொழியில் பஃபரிங் எனப்படுகிறது.

இப்படியே தங்கு தடையில்லாமல் உள்ளடக்கத்தை பார்த்துவிட முடிகிறது. இதற்காக எந்த கோப்பையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம். எனவே தான் ஊடக கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலே, வீடியோ பார்ப்பது அல்லது ஆடியோவை கேட்பது ஸ்டிரீமிங் எனப்படுகிறது. இதை ஒரு ஏரிக்கும் ஓடைக்குமான வித்தியாசமாக கற்பனை செய்து பார்க்கலாம். இரண்டும் ஒரே அளவு நீரை கொண்டிருக்கலாம். ஏரியில் எல்லா தண்ணிரும் ஒரே இடத்தில் இருக்கிறது. ஓடையில், எல்லா தண்ணிரும் ஒரே நேரத்தில் இரே இடத்தில் இருப்பதில்லை- ஓடிக்கொண்டே இருக்கிறது.

கோப்புகளை தரவிறக்கம் செய்வது என்பது, ஏரியில் தண்ணிர் இருப்பது போன்றது. கோப்பை நம்முடைய கம்ப்யூட்டர் ஹார்ட் டிரைவில் சேமித்து வைக்க வேண்டும். மாறாக, ஸ்டிரீமிங்கள் உள்ளடக்கம் நம்முடைய பிரவுசருக்கு பாய்ந்தோடி வருகிறது. சர்வரில் இருந்து நேரடியாக பிரவுசருக்கு வருவதாகவும் கொள்ளலாம்.

சேவை வழங்குனரால் அளிக்கப்படும் மல்டி மீடியா உள்ளட்டக்கத்தை பயனர் தொடர்ச்சியாக பெறுவது மற்றும் பார்ப்பது எனும் வரையரை மூலமும் ஸ்டிரீங் செயல்பாட்டை இன்னும் கச்சிதமாக புரிந்து கொள்ளலாம். நேரடி (லைவ்) மற்றும் பதிவு செய்யப்பட்ட உள்ளடக்கத்தை ஸ்டிரீமிங் முறையில் பெறலாம். நேரடி உள்ளடக்கம் எனும் அது லைவ் ஸ்டிரீம் என கொள்ளப்படுகிறது. நேரடி ஒளிபரப்பு போன்றது.

ஸ்டிரீமிங் செயல்பட ஒரு வழங்குனர் தேவை. பயனர் தரப்பில், உள்ளடக்கத்தை பெறுவதற்கான பிளேயர் சாதனம் தேவை. நவீன செயலிகள் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றன. இவைத்தவிர, உள்ளடக்கத்தை பெறுவதற்கு என்றே, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி தவிர, வேறு பல பிரத்யேக சாதனங்களும் அறிமுகமாகியிருக்கின்றன.

பென் டிரைவ் போன்ற விரல் அளவு சாதனத்தின் மூலம், இணையம் வாயிலாக எளிதாக உள்ளடக்கத்தை பெற முடிகிறது. (ரோக்கு- Roku , அமேசான் பயர் ஸ்டிக்- Amazon Fire TV Stick, கூகுள் குரோம்காஸ்ட்- Google Chromecast ) திரையரங்கிற்கு சென்று படம் பார்த்ததில் இருந்து இது எத்தனை பெரிய மாற்றம். கேபிள் இணைப்பு இல்லாமல் டிவி பார்க்கலாம் என்பது எத்தனை பெரிய முன்னேற்றம்.

ஆனால் இந்த மாற்றம் திடிரென இப்போது சாத்தியமாகிவிடவில்லை. இணையத்தின் வளர்ச்சியும், அதற்கு முன்னும் பின்னும் உண்டான தொழில்நுட்ப மேம்பாடுகளும் இணைந்தே இதை சாத்தியமாக்கியுள்ளன. இந்த மாற்றங்களை புரிந்து கொள்ள ஸ்டிரீமிங் வரலாற்றை திரும்பி பார்க்கலாம்.

( தொடரும்)

- 4தமிழ்மீடியாவிற்காக: சைபர்சிம்மன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction