free website hit counter

ஓடிடி - ஆஹாவென எழும் திரைப்புரட்சி - 3

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எந்த ஒரு உள்ளடக்கத்தையும் (ஆடியோ, வீடியோ) நேரடியாக பெற வழி செய்யும் ஸ்டிரீமிங் சேவை திடிரென ஒரு நாளில் அறிமுகமாகிவிடவில்லை. தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்களே படிப்படியாக ஸ்டீரிமிங் சேவைக்கு வழிவகுத்தன.

3. ஸ்டிரீமிங் சேவையின் ஆதி வரலாறு !

ஸ்டிரீமிங் வளர்ந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் போது, மைல்கல்லாக மின்னுவது நெட்பிளிக்ஸ் மட்டும் அல்ல. நெட்பிளிக்ஸ் திரைப்படங்களை ஸ்டிரீமிங் முறையில் பார்க்க வழி செய்வதற்கு முன்னரே, யூடியூப் நிறுவனம் வீடியோ நுகர்வுக்கான களத்தை தயார் செய்திருந்தது. யூடியூப் அறிமுகமாவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னரே இணையத்தில் முதல் ஸ்டிரீமிங் செய்யப்பட்டிருந்தது. அதே ஆண்டில் ஸ்டிரீமிங் வசதியை சாத்தியமாக்கிய ரியல் மீடியா நிறுவனம் உதயமானது.

இதனிடையே கோப்பு பகிர்வு முறையில் இசையை கேட்பதை சாத்தியமாக்கிய நேப்ஸ்டர் அறிமுகமானது என்றால், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் இணையம் மூலம் இசை வெளியீட்டை ஜனநாயகமயமாக்கிய ஐ.யு.எம்.என் இணையதளம் அறிமுகம் ஆகியிருந்தது. இதே காலத்தில் அறிமுகமான எம்பி-3 கோப்பு வடிவம் இணையம் வழியே இசை பாய்ந்தோடுவதற்கான முக்கிய அம்சமாக அமைந்தாலும், இதற்கு பல ஆண்டுகளுக்கு முன் துவங்கிய வீடியோவை டிஜிட்டல்மயமாக்கும் முயற்சியும் முக்கியமாக அமைகிறது. ஆனால், ஸ்டீரிமிங் சேவையின் வரலாறு இவற்றுக்கெல்லாம் பின்ன்னோக்கிச் செல்கிறது.

ஸ்டிரீமிங் என்பது பிரதானமாக இணையத்தால் சாத்தியமான வசதி என்றாலும், அதன் ஆதி வரலாறு இணையத்தை விட முந்தையது என்பது தான் ஆச்சர்யம். இணையம் மட்டும் அல்ல, கம்ப்யூட்டர்களே இன்னமும் பயன்பாட்டிற்கு வந்திராத காலத்தில் இருந்து இதன் வரலாறு துவங்குகிறது. ஸ்டிரீமிங் தொடர்பான விக்கிபீடியா கட்டுரை, 1920 களில் அறிமுகமான முஸாக் சேவை ஸ்டிரீமிங்கின் துவக்க புள்ளி என குறிப்பிடுகிறது. ஆனால், அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஸ்டிரீமிங் முறையில் இசை அலைகள் காற்றில் தவழ்ந்து, காதுகளை வந்தடையத்துவங்கி விட்டன.

இணையத்தின் பூர்வ கதை தொலைபேசி இணைப்புகளுடன் பின்னி பினைந்திருக்கிறது எனும் போது, இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் வியப்புக்குறியது என்னவெனில், ஒலியை பதிவு செய்யும் வசதி கண்டறியப்படுவதற்கு முன்னரே, தொலைபேசி வழியே இசை ரசிகர்களை வந்தடைந்தது என்பது தான். தொலைபேசி கச்சேரி மூலம் இந்த அற்புதத்தை நிகழ்த்திக்காட்டியவர் எலிஷா கிரே (Elisha Gray).

 

அமெரிக்க கண்டுபிடிப்பாளரான கிரே, தொலைபேசியை கண்டுபிடித்தவராக அறியப்படும் அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் சமகாலத்தவர் மட்டும் அல்ல: இந்த கண்டுபிடிப்பிற்கான சொந்தக்காரராகவும் விளங்குபவர். ஆம், கிரகாம் பெல் போலவே, கிரேவும் தொலைபேசி கருவிக்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். கிரகாம் பெல், தொலைபேசிக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்த அதே நாளில் கிரேவும் தனது கண்டுபிடிப்பிற்கான விண்ணப்பத்தை சமர்பித்தார். ஆனால், கிரகாம் பெல், கிரேவை விட சில மணி நேரங்கள் முன்னதாக விண்ணப்பம் சமர்பித்ததால், அவரது பெயரில் கண்டுபிடிப்பு ஏற்கப்பட்டது.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றாலும், கிரகாம் பெல்லுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்ததால், அவரே தொலைபேசி கண்டுபிடிப்பாளராக கருதப்படுகிறார். தொலைபேசி கண்டுபிடிப்பாளர் எனும் பெருமையை தவறவிட்டாலும், கிரே ’இசை தந்தி’ (Musical Telegraph ) எனும் நவீன இசைக்கருவியை கண்டுபிடித்தவராக போற்றப்படுகிறார். இந்த கருவியை கொண்டு தான், அவர் கம்பி இணைப்பு மூலம் இசையை தவழவிட்டார். தொலைபேசி கச்சேரி என ஒலி வரலாற்றில் பிரபலமாக குறிப்பிடப்படும் இந்த நிகழ்ச்சி 1877 ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, கிரே அருகே இருந்த பிலடல்பியா நகரில் ஒருவரை பியானோ வாசிக்க செய்து அதன் ஒலி அலைகளை தந்தி கம்பிகள் மூலம் கொண்டு வந்து, நியூயார்க் கச்சேரி அரங்கில் இருந்த சாதனத்தில் ஒலிக்கச்செய்து வியக்க வைத்தார்.

 

இன்று, எம்பி3- சாதனம் வழியேவும், செல்போன் மூலமும் இசையை டிஜிட்டல் வடிவில் கேட்டு ரசிக்க முடிகிறது என்றால், இதற்கான துவக்கப்புள்ளியாக கிரே நிகழ்த்திக்காட்டிய தொலைபேசி வழி இசை பரிமாற்றத்தை கருதலாம். ஸ்டிரீமிங்கின் ஆதி வடிவமாகவும் இதை கொண்டாடலாம். இதன் பிறகு, 1881 ம் ஆண்டு அறிமுகமான தியேட்டரோபோன் சாதனத்தையும் மற்றொரு அற்புதம் என்றே குறிப்பிட வேண்டும்.

பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த கிளமண்ட் அட்லர் (Clement Ader) எனும் கண்டுபிடிப்பாளர் உருவாக்கிய இந்த சாதன அமைப்பு, நேரடி இசை நிகழ்ச்சிகளை தொலைபேசி வழியே, கேட்டு ரசிக்க வழி செய்தது. அந்த காலத்திலேயே வாக்மன் இருந்தது என்று சொல்லும் வகையில், இரண்டு காதுகளிலும் சாதனத்தை வைத்துக்கொண்டு தொலைபேசி வழி இசை கேட்க வழி செய்த இந்த சாதனத்தை நினைத்து வியக்காமல் இருக்க முடியாது.

பின்னர் 1896 ல் தாடியஸ் காஹில் (Thaddeus Cahill ) என்பவர், இசையை மின்னணு முறையில் கொண்டு செல்லக்கூடிய இசைக்கருவியை உருவாக்கினார்.


இசை பரிமாற்றத்தில் அடுத்த பாய்ச்சல், 1920 களில் நிகழ்ந்தது. இந்த காலகட்டத்தில், நடைபெற்ற ஆய்வுகளும், கண்டுபிடிப்பு முயற்சிகளும், சமிக்ஞ்சைகளை தொலைதூரத்திற்கு அனுப்பி வைப்பதை நோக்கமாக கொண்டிருந்தன. அந்த வகையில், ராணுவ தளபதியான, ஜார்ஜ் ஸ்குயர் (George O. Squier ) என்பவரும் மின்சார கம்பிகள் வழியே சமிக்ஞ்சைகளை அனுப்பி வைப்பது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இதன் பயனாக, போனோகிராப் இசை கேட்பு சாதனத்தில் ஒலிக்கும் பாடலை, மின்சார கம்பிகள் மூலம் நீண்ட தொலைவில் கேட்கச்செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் கண்டறிந்து, அதற்கான காப்புரிமை பெற்றார்.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான உரிமத்தை ’தி நார்த் அமெரிக்கன்’ எனும் நிறுவனத்திற்கு வழங்கினார். இந்நிறுவனத்தின் ஆதரவுடன், ’வயர்டு ரேடியோ’ எனும் நிறுவனத்தையும் துவக்கியிருந்தார். இந்நிறுவனம் சார்பாக, மின்சார கம்பி வழியே இசையை ஒலிபரப்பும் சேவையை அறிமுகம் செய்தார். அப்போது கோக்கோ கோலா நிறுவனம் பிரபலமாக இருந்தது. அந்த பிராண்ட் பெயரை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், போனோகிராப் நிறுவனம் ஒன்று தன் சேவைக்கு விக்டரோலா என பெயர் வைத்திருந்தது. இதை மனதில் கொண்டு, ஸ்குயர் தனது இசை ஒலிபரப்பு சேவைக்கு, புகைப்பட கருவிகள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கிய கோடாக்கின் சாயலில், முஸாக் என பெயர் வைத்தார்.

1934 ம் ஆண்டு அறிமுகமான முஸாக் (Muzak) சேவையை இன்றைய ஸ்டிரீமிங்கின் முன்னோடி எனலாம். அப்போது வானொலி அறிமுகமாகியிருந்தாலும், ரேடியோ அலைகள் வழியே அல்லாமல், மின்சார இணைப்பு வழியே இசையை முஸாக் வீடுகளுக்கு கொண்டு வந்தது. துவக்கத்தில், மாத கட்டண அடிப்படையில் இந்த சேவை வழங்கப்பட்டது. இசை மட்டும் அல்லாமல், தனி சேனலாக செய்திகளும் ஒலிபரப்பபட்டது. அது மட்டும் அல்ல, இந்த சேவை வழியே ஒலிபரப்புவதற்காக, பிரத்யேக இசை கோர்வைகளையும் தயாரித்தனர்.

வானொலி பெட்டிகள் மூலம் முஸாக் பெட்டிகள் வாயிலாக இசையை கேட்டு ரசிக்க முடிந்தது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் வானொலி நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, வர்த்தக நோக்கில் வானொலி சேவையும், நிகழ்ச்சிகளும் அறிமுகமாகி பொதுமக்கள் வரவேற்பை பெற்றது. இலவச வானொலியுடன் போட்டி போட முடியாது என புரிந்து கொண்ட, முஸாக் தனது கவனத்தை பொதுமக்களிடம் இருந்து வர்த்தக நிறுவனங்கள் பக்கம் திருப்பியது.

நியூயார்க்கில் இருந்த ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களுக்கு தனது சேவையை முஸாக் ஒப்பந்த அடிப்படையில் வழங்கத்துவங்கியது. அதிக இடைஞ்சல் இல்லாமல் பின்னணியில் இசையை ஒலிபரப்பிய முஸாக் சேவைக்கு ரெஸ்டாரண்ட்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதன் தொடர்ச்சியாக, உயரமான கட்டிடங்களில் இயக்கப்பட்ட லிப்ட் கருவிகளிலும், முஸாக் இசை ஒலிக்கத்துவங்கியது. இதன் காரணமாக பின்னணி இசை, எலிவேட்டர் இசை என்றெல்லாம் குறிப்பிடப்பட்ட முஸாக், அடுத்த கட்டமாக தொழிற்சாலைகளில் தனது சேவையை விரிவாக்கியது. ஆலை உற்பத்தி, தொழிலாளர் நிர்வாகம் தொடர்பான கோட்பாடுகளும், கருத்தாக்கங்களும் பிரபலமாகி கொண்டிருந்த நிலையில், ஆலைகளின் பின்னணில் பொருத்தமான இசையை ஒலிக்கச்செய்வதன் மூலம் தொழிலாளர் ஈடுபாட்டை அதிகரிக்கச்செய்யலாம் எனும் கருத்துடன் முஸாக் தனது சேவையை முன்வைத்தது.

இசைக்கும், தொழிலாளர்கள் கவனத்திற்கும் இடையிலான தொடர்பை சுட்டிக்காட்டும் அறிவியல் ஆய்வுகளை ஆதாரமாக காண்பித்து முஸாக் தனது பின்னணி இசை சேவையை மேலும் பிரபலமாக்கியது. முஸாக் சேவையால் உற்பத்தி அதிகரித்ததாக வெளியான தகவல்கள் இதன் வீச்சை பன்மடங்கு பெருக்கியது. ஒரு கால கட்டத்தில், ஹோட்டல்களுக்கான விளம்பரங்களில், ஒவ்வொரு அறையிலும் வானொலி மற்றும் முஸாக்கை கேட்டு ரசிக்கலாம் என குறிப்பிடப்படும் அளவுக்கு அதன் செல்வாக்கு அமைந்திருந்தது. கலை உலகில் பெரும் தாக்கம் செலுத்திய ஆண்டி வோரல் ( Andy Warhol ) கூட முஸாக்கை ஆதரித்திருக்கிறார். அதே நேரத்தில் முஸாக் பல்வேறு சர்ச்சைகளுக்கும் இலக்கானதை மனதில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து முஸாக், தனது வர்த்தக பாதையில் எழுச்சியையும் அதன் பிறகு பல்வேறு சவால்களை சந்தித்து பின்னுக்குத்தள்ளப்பட்டாலும், இசையை நேரடியாக ரசிகர்களுக்கு வழங்கிய சேவை என்ற வகையில் முக்கியமாக அமைகிறது. ரசிர்களை இசை வந்தடைந்த விதத்தில் முஸாக் தனித்துவமான வழியாக விளங்கினாலும், இசைத்தட்டுகள், எப்.எம் வானொலி போன்ற மரபான ஊடகங்களே உள்ளடக்க விநியோகத்தில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் இணையத்தின் வருகை விநியோக விதிகளை மாற்றிக்கொண்டிருந்தது. இந்த மாற்றத்துடன், அனலாக் வடிவத்தில் இருந்து டிஜிட்டல் வடிவிற்கான மாற்றமும் சேர்ந்து, ஸ்டிரீமிங் சேவையாக உருவான விதத்தை தொடர்ந்து பார்ப்போம்.

( தொடரும்)

- 4தமிழ்மீடியாவிற்காக: சைபர்சிம்மன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula