ஏழு மணிநேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்தது டிஜிட்டல் உலகின் பெரும் பகுதி. பேஸ்புக் முதலான மென்லோ பார்க் நிறுவனத்தின் சமூக வலைத்தளங்கள் நேற்று ஏழு மணி நேரத்திற்கும் மேலாக முற்றாக முடங்கின.
தங்கள் தரவு மையங்களின் உள்ளமைவில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக இது நிகழ்ந்திருக்கக் கூடும் எனவும், இதனால் பயனாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துவதாகவும் பேஸ்புக் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
நேற்று அக்டோபர் 4, ஐரோப்பிய நேரம் மாலை 5.30 மணியளவில் தொடங்கிய இந்த முடக்கம் சுமார் ஏழுமணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தன. இந்த முடக்கம் உலகெங்கிலுமுள்ள பல மில்லியன் பாவனையாளர்களைப் பாதித்திருப்பதுடன், பொருளாதார நிலைகளிலும் பலமான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதாரப் புள்ளிவிவரங்களின்படி, ஜுக்கர்பெர்க் தலைமையிலான சமூக வலைத்தளங்களின் நீண்ட "வீழ்ச்சி" உலகப் பொருளாதாரத்தில் சுமார் 1 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வர்த்தகத்தினை ஆட்டம் காணச் செய்திருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஃபேஸ்புக்கின் உள்கட்டமைப்பு துணைத் தலைவர் சந்தோஷ் ஜனார்தன், "எங்களது தரவு மையங்களில் தரவு போக்குவரத்தை வழிநடத்தும் பொறுப்பான திசைவிகளின் கட்டமைப்பில் செய்யப்பட்ட சில மாற்றங்களால் ஏற்பட்ட இந்த குறுக்கீடு எங்கள் மையங்களின் தகவல்தொடர்புகளில் ஒரு தீவிர விளைவை ஏற்படுத்தியுள்ளது, எங்கள் சேவைகளைத் தடுத்துள்ளது." என நேற்றைய முடக்கத்திற்கான காரணத்தினை விளக்கியுள்ளார்.
பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களின் நீண்ட நேர முடக்கம் குறித்து, மீம்ஸ் க்ரியேட்டர்கள், புதிய மீம்ஸ் செய்திகளைப் பிற தளங்களில் பகிர்ந்து, கொண்டாடினார்கள்.