மூலிகை அறிவோம்
செம்பையர் மனங்கவர்- செம்பரத்தை
சீனா மற்றும் வட இந்தியாவிற்கு சொந்தாமனதெனினும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் அதிகளவில் பரம்பிக் காணப்படுகின்றது. அழகுக்காக பாதையோரங்களில் வளர்க்கப்படுவதுமன்றி அழகுக்கலையிலும் மிக முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டுள்ளது என்றால் அது மிகையில்லை.
தாவரவியல் பெயர் - Hibiscus rosa-sinensis
குடும்பப் பெயர் - Malvaceae
ஆங்கிலப் பெயர் - Shoe flower
சிங்களப் பெயர் - Sapattu-mal, Wada-mal
சமஸ்கிருதப் பெயர் - Arkapriya, Aruna, Joba
வேறு பெயர்கள் -
சப்பாத்துப் பூ, செவ்வரத்தை, அரட்டம்
பயன்படும் பகுதிகள்
இலை, பூ, வேர்
சுவை - இனிப்பு
வீரியம் - சீதம்
விபாகம் - இனிப்பு
வேதியியற் சத்துகள் பூக்களில் சிறிதளவு Hibiscetin உண்டு.
மருத்துவச் செய்கைகள்
Aphrodisiac - இன்பம் பெருக்கி
Demulcent - உள்ளழலாற்றி
Laxative - மலமிளக்கி
Emmenagogue - ருதுவுண்டாக்கி
Emollient - வரட்சியகற்றி
Expectorant- கோழையகற்றி
Refrigerant - குளிர்ச்சியுண்டாக்கி
தீரும் நோய்கள்
மேகவெள்ளை- White discharge
இரத்தப் பிரமேகம்
பெரும்பாடு- Menorrhagia
சூதக வலி- Dysmenorrhea
இரத்தபித்தம்
இருமல்
சுரம்
சளி
எரிகாயம்
வீக்கங்கள்
சிறுநீரக நோய்
பித்தநோய்
முடி உதிர்வு
இளநரை
பயன்படுத்தும் முறைகள்
இலைச்சாற்றை தண்ணீரிற் கலந்து வெள்ளை நோய்க்குக் கொடுக்கலாம். அல்லது கஷாயமிட்டுக் குடிக்கக் கொடுக்கலாம்.
பூவை முறைப்படி குடிநீர் அல்லது ஊறல் கஷாயமிட்டு வேளைக்கு 40 ml வீதம் கொடுத்துவர சிறுநீரக வியாதிகளை கண்டிக்கும். பெரும்பாட்டை (அதிக உதிரப் போக்கு) நிறுத்தும். தேகத்திற்கு குளிர்ச்சியைத் தரும்.
இக் கஷாயத்துடன் பால், சர்க்கரை, ஓமம் சேர்த்து வெள்ளைக்குக் கொடுக்கலாம் (White discharge).
பூவிதழ் 1 பங்கு, நீர் 6 பங்கு சேர்த்து சிறுதீயிட்டு எரித்து கால் பாகமாக்கி, பிசைந்து வடிகட்டி சீனிச் சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து இதில் 17 - 35 கிராம் வரையிலும் மேற்கூறிய நோய்களுக்கு கொடுக்கலாம்.
செம்பரத்தம் பூவின் சாறுக்கு சமபாகம் ஒலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயிட்டு நீர் சுண்டும் வரை எரித்து எடுத்து காற்றுப்படாமல் ஒரு குப்பியில் அடைத்து வைத்துக் கொண்டு தலையில் தடவிவர மூளை குளிர்ச்சியடைந்து மயிர்கள் கறுத்துச் செழுமையாய் வளரும்; இளநரை மறையும்.
இதன் வேர்ச்சூரணம், தாமரைக் கிழங்குச் சூரணம், முள்ளிலவுப் பட்டைச் சூரணம் இம் மூன்றும் சமனெடை எடுத்து 4-6 கிராம் வரை நீரிற் கலந்து உட்கொள்ள பெரும்பாட்டை நிறுத்தும்; சிறுநீரக வியாதிகளைப் போக்கும்.
இதன் வேருடன் ஆடாதோடையிலை சேர்த்து கஷாயமிட்டு இருமலுக்கு கொடுக்கலாம்.
பூவின் மொட்டை உலர்த்தி சூரணமாக்கி விந்து நட்டம், சிறுநீர்ப்பை தாபிதம்(Inflammation) இவைகளுக்கு கொடுக்கலாம்.
பூவை நீரிற் கழுவி வாயிலிட்டு மென்று உண்டு வர தேகச் சூட்டை தணிக்கும்.
வெந்நீரிலிட்டு பூவின் சாறெடுத்து குளிக்கும் போது தலைக்கு வைத்து வர முடி உதிர்வை கட்டுப்படுத்தி தலை மயிரை அடர்த்தியாக வளரவைக்கும்.
மென்மையும் தண்மையும் கொண்ட பூக்களின் மருத்துவ குணங்கள் இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றே. ஆனால் அவை பற்றி நாம் அறியாதிருப்பது தான் துரதிர்ஷ்டமே!
இயற்கையின் மகிமை அறிவோம்; பூக்களின் அருமை தெரிவோம்.
~சூர்யநிலா