கீரை வகுப்பைச் சேர்ந்த வெந்தயமானது இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், பம்பாய், சென்னை போன்ற இடங்களிலும் மத்திய ஐரோப்பா, எகிப்து, இலங்கை போன்ற நாடுகளிலும் பயிர்செய்யப்படுகின்றது.
தாவரவியல் பெயர்- Trigonella foenum graecum 
குடும்பவியல் பெயர்- Leguminosae
ஆங்கிலப் பெயர்- Fenugreek
சமஸ்கிருதப் பெயர்- மேதி, மெந்தா
சிங்களப் பெயர்- Uluhal
வேறு பெயர்- மெந்தியம், வெந்தை, மேதி
பயன்படும் பகுதி-  இலை, விதை
சுவை- கைப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- கார்ப்பு
வேதியியற் சத்துகள்-
இலை Vitamin C ஐ பிரதானமாக கொண்டுள்ளது.
விதையில் 
Vitamin A
Alkaloids
Trigonelline 
Mucilage
tannic acid
Fixed oil
Volatile oil
Bitter extractive diosgenin
Gitogenin
Gentianine
Carpaine
Saponins
Sapogenins
Vitexin 
Galactomannan
என்பன காணப்படுகின்றன.
 மருத்துவச் செய்கைகள்- 
இலை 
குளிர்ச்சியுண்டாக்கி-Refrigerant
மலமிளக்கி- Laxative 
விதை 
சிறுநீர் பெருக்கி- Diuretic 
உள்ளழலாற்றி- Demulcent
ருதுவுண்டாக்கி- Emmenagogue
துவர்ப்பி- Astringent 
வரட்சியகற்றி- Emollient 
காமம்பெருக்கி- Aphrodisiac
பாற்பெருக்கி- Galactagogue
அகட்டுவாய்வகற்றி- Carminative
உரமாக்கி- Tonic
பயன்படும் நோய்நிலைமைகள் -
இலை 
அக்னி மாந்தம்
இருமல்
உணவில் விருப்பமின்மை
வயிற்றுப்பிசம்
வாதகோபம்
கபதோஷம்
விதை 
பிள்ளை கணக்காய்ச்சல்
சுரம்
குன்மம்
பேதி
சீதக்கழிச்சல்
தேக உஷ்ணம்
தாகம்
இரத்தபித்தம்
கொடிய இருமல்
காசநோய்
கண்ணோய்கள்
நீரிழிவு
கல்லீரல், மண்ணீரல் வீக்கம்
பயன்படுத்தும் முறைகள்- 
இலை 
• இலையை அரைத்து கிளறி பயன்படுத்த உள்/ வெளி புறத்தில் உருவாகும் வீக்கமும் சுட்ட புண்களும் குணமாகும்.
• இக் கீரையுடன் கோழிமுட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யிற் பாகஞ் செய்து உணவுடன் உட்கொள்ள இடுப்புவலி தீரும்.
• இலையை வேகவைத்து தேன்விட்டு கடைந்து சாப்பிட மலத்தை வெளியேற்றி குடலை சுத்தியாக்கும்;  மார்புவலி, இருமல், மூலரோகம், உட்புண் இவை நீங்கும்.
• இதனுடன் சீமைப்புளி, அத்திப்பழம்,  திராட்சை சம அளவு சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட மார்புவலி, மூச்சடைப்பு விலகும்.
• இதனுடன் மயிர்சிக்கிப் பூண்டு சேர்த்து கொதிக்க காய்ச்சி இடுப்பின் மீது விட்டுக் கழுவ பிரசவ வேதனை குறையும்.
வயிற்றில் மரித்த பிண்டமும் அழுக்கும் சீக்கிரத்தில் வெளிப்படும்.
• இலையுடன் சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்துக் கட்டிகளின் மீது பற்றிட அவைகள் உடையும்.
• கீரையை வேகவைத்து வெண்ணெயிட்டு வதக்கி உட்கொள்ள பித்தமயக்கம் தீரும்.
• இதனுடன் பாதாம், கசகசா, கோதுமை, நெய், பால், சர்க்கரை சேர்த்து இலேகியமாக்கி சாப்பிட தேகபலமும் வன்மையும் உண்டாகும்; இடுப்பு வலி தீரும்.
 வித்து 
• வாய்வுத் தொல்லைகள் காணப்படுமிடத்து இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு விழுங்க வாய்வு உடனடியாக நீங்கி சுகமாக்கும்.
• இதை வறுத்துப் பொடி செய்து ஊறல்நீர் செய்து உட்கொள்ள வயிற்றுவலி,  வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, சீதக் கழிச்சல் முதலியவை குணமாகும்.
• வெந்தயம் 17 g , 340g பச்சையரிசியுடன் சேர்த்துப் பொங்கி, உப்பிட்டு சாப்பிட இரத்தவிருத்தியுண்டாகும்.
• கஞ்சியில் சேர்த்து காய்ச்சி கொடுக்க பால் சுரக்கும்.
• அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து தலைமுழுகி வர மயிர் வளரும்; மயிர் உதிர்வதை தடுக்கும்.
• இதை பொடி செய்து களி கிண்டி கட்ட சருமப் புண்,  பூச்சி ரோகங்களைப் போக்கும்.
• இதை வறுத்து இதனுடன் சம அளவு வறுத்த கோதுமையை சேர்த்து கோப்பிக்கு பதிலாக பயன்படுத்தலாம். இதனால் உடல் வெப்பம் தணியும்.
• வெந்தயம்,  கடுகு, பெருங்காயம்,  கறிமஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து நெய்விட்டு வறுத்துப் பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி,  வயிற்றுப் பொருமல், உதிரச் சிக்கல், கல்லீரல் - மண்ணீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் சாந்தப்படும்.
• மிளகு, கடுகு, பெருங்காயம்,  வெந்தயம்,  துவரம் பருப்பு, கறிவேப்பிலை,  இவற்றை தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்புச் சேர்த்து சட்டியை மூடி அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் உட்கொள்ள வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் நீங்கும்.
தென்னிந்திய மற்றும் இலங்கை நாட்டின் பாரம்பரிய சமையலில் இன்றும் பயன்பாட்டிலுள்ளது.bஅன்றாடம் இவற்றை நாம் சமையலில் உபயோகித்தால் நோய் நொடியின்றி வாழ்தல் நிச்சயம். 
~சூர்யநிலா
																						
     
     
    