சிறுவயதில் நாம் வண்ணங்களை எண்ணும் விளையாட்டை குழுவாக விளையாடிருப்பது ஞாபகம் இருக்கிறதா?
ஒருவர் ஒரு நிறத்தை கூறி அது எங்கே என கேட்டு துரத்துவார். மற்றவர்கள் தாம் பிடிபடுவதற்குள் ஓடிச்சென்று அந்நிறத்தில் உள்ள பொருளை தொட்டுவிடவேண்டும். பச்சை நிறம் மற்றும் கண்ணில் எளிதில் படாத நிறங்களை கூறி விரட்டுவதே அவ்விளையாட்டின் சுவாரஸ்யம். இம்மாதிரியான விளையாட்டுக்கள் சிறார்களின் மனவளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பெரும் பங்காற்றிருப்பது குறிப்படதக்கது.
தற்போது இதேபோல் வண்ணங்களை எண்ணுவது பதட்டமாக உணரும் மனநிலையை அமைதியாக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.
நல்ல பழக்கங்களை உருவாக்குவது நமது மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஆனால் தற்கால சூழல் anxious எனும் பதட்டத்தை எளிதில் உணரச்செய்கிறது. இதற்காக பல்வேறு தீர்வுகள் வழங்கப்படுகிறது.
பதட்டத்தை தணித்து தற்கணத்தில் உங்களை இணைக்க அல்லது நிலைநிறுத்த உதவும் உத்திகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
அவை அடிப்படையில் ஒரு வகையான மனநிறைவுப் பயிற்சியாகும், நீங்கள் அமைதியடையும் வரை, பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய உங்கள் எதிர்மறை எண்ணங்களிலிருந்து ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ளும் மன அமைதிப் பயிற்சியாக கருதப்படுகிறது.
அதாவது உங்களைச் சுற்றியுள்ள ஒரே நிறத்தின் வெவ்வேறு சாயல்களை எண்ணும் ஒரு சிறந்த உத்தியை கூறுகிறார்கள்.
உதாரணமாக, நீல நிறத்தை எடுத்துக்கொள்வோம். உங்களைச் சுற்றியுள்ள வானம், வாகனங்கள், உடைகள் போன்ற பல்வேறு நீல நிறங்களை உங்களால் பார்க்க முடிகிறதா? எண்ணிக்கையைத் தவறவிட்டால், வேறு நிறத்தைத் தேர்ந்தெடுங்கள் அல்லது அதே நிறத்தில் இருந்து மீண்டும் தொடங்குங்கள். இது ஒருவகை புவி இணைப்பு நுட்பம் (grounding techniques) என்பதோடு எந்த நேரத்திலும் இவற்றை செய்யலாம்.
இதன் பயன் :
வண்ணங்களை எண்ணுவது என்பது ஒரு நேரடியான ஆனால் சக்திவாய்ந்த நுட்பமாகும். இது பதட்டம் ஏற்படும்போது, உங்களை நிகழ்காலத்தில் நிலைநிறுத்தி, அமைதியையும் கவனத்தையும் அளிக்கிறது.இது, வேகமாக ஓடும் உங்கள் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றில் கவனம் செலுத்த உதவுவதன் மூலமும், உங்கள் கவனத்தைச் சுற்றியுள்ள சூழலுக்குத் திருப்புவதன் மூலமும், மன ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கிறது.
மனநல நிபுணர்கள் மற்றும் ஆய்வுகளால் ஆதரிக்கப்படும் இந்த நுட்பம், பதட்டத்தைக் குறைத்து தளர்வை ஊக்குவிக்கும். நீங்கள் மிகுந்த மன அழுத்தத்திலோ அல்லது மனதை ஒருமுகப்படுத்த ஒரு கணம் தேவைப்பட்டாலோ வண்ணங்களை எண்ணுவது என்பது உங்கள் மன அமைதியை அதிகரிக்க உங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்ளக்கூடிய ஒரு எளிய பயிற்சியாகும்.
source : thehappybroadcast
