இன்று உலகில் நம் அனைவரின் ஒவ்வொரு மூன்றாவது தேக்கரண்டி உணவும் மகரந்தச் சேர்க்கையைச் சார்ந்துள்ளது.
மகரந்தச்சேர்க்கையின் வல்லுநர்கள் தேனீக்கள். தேன் உற்பத்தி பொருட்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாகவும் உள்ளன.
இன்று உலக தேனீ தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 1734 மே 20 ஆம் திகதி தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்டன் ஜானியா பிறந்தார். அவரது நினைவாகவும் சுற்றுச்சூழலுக்குத் தேனீக்களின் பங்களிப்பினைப் பாராட்டுவதன் நோக்கோடும் மற்ற அளிகள் எனப்படும் பல்வகை வண்டுக்களின் மகரந்த சேர்க்கையில் அதன் பங்களிப்பை அங்கீகரிக்கும் முகமாகவும் இத்தினம் கொண்டுவரப்பட்டது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, நிலையான விவசாயம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மிக முக்கியமான உயிரினங்களில் தேனீக்களும், தேனீ வளர்ப்புத் துறையும் ஒன்றாகும்.
சுமார் 1 மில்லியன் பூக்கள் 50 000 தேனீக்கள் - 1 கிலோகிராம் தேன் தயாரிக்க தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் விஞ்ஞான ஆய்வுகள் தேனீக்களின் ஆரோக்கியம் எதிர்மறையான தாக்கத்தை சந்தித்துள்ளதாகவும் இதன் விளைவாக அவை ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதனால் மகரந்தச் சேர்க்கை இனங்கள், தேனீ மற்றும் பல பூச்சிகள் ஏராளமாக குறைந்து வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுலோவீனியாவால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் பேரில் மே 20 ஆம் திகதி உலக தேனீ தினமாக கொண்டாட; 2017ல் ஐ.நா உருப்பு நாடுகள் ஒப்புதல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து இந்நாளில் தேனீ உள்ளிட்ட அளி இனங்களின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வு செயற்பாடுகள் சுலோவீனியாவுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
அவ்வகையில் தேனீக்கள் மற்றும் பிற அளிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதில் இளைஞர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில், "தேனீ ஈடுபாட்டில் இளைஞர்களின் பங்கு" என்ற கருப்பொருளில் உலக தேனீ தினம் 2024 கவனம் செலுத்துகிறது. இன்றைய இளைஞர்களை தேனீ வளர்ப்பு நடவடிக்கைகள், அதன் தொடர்பான கல்வி முன்னெடுப்பு போன்றவற்றில் ஈடுபடுத்தும் முயற்சின் மூலம் புதிய தலைமுறை சுற்றுச்சூழல் தலைவர்களை ஊக்குவிக்கலாம். இது நேர்மறையான தாக்கத்தை உலகில் ஏற்படுத்த அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் தேனீக்கள் மற்றும் பிற பூச்சி இனங்களை பாதுகாக்க நீங்கள் தேனீ வளர்ப்பவராக இருக்க வேண்டியதில்லை. நம்மால் செய்யக்கூடிய சில எளிய மாற்று வழிகளில் அவற்றை பாதுகாக்க முயற்சிக்கலாம். அவ்வகையில் :
* தேனீக்கு உகந்த பூக்களை நடுதல்
* நிலையான விவசாய நடைமுறை உணவு தேர்வுகளை தேர்வு செய்தல்
* தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்தல்
* தரையில் கூடு கட்டும் தேனீக்களுக்கு கூடு கட்டும் இடங்களை விட்டு விடுதல்
* வேலிச்செடிகளை உருவாக்குதல்
* உலக தேனீ தினத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை பகிர்தல்
ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர்.
"தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கைகள் இருப்பதற்கான சூழ்நிலையை உறுதிப்படுத்தாமல் உலகப் பசியைக் குறைப்பது பற்றிப் பேசுவது ஒருவரின் கண்ணில் மணல் அள்ளுவதாகும்! எல்லோரும் தேனீக்களின் பேச்சைக் கேட்க வேண்டிய நேரம் இது, குறிப்பாக முடிவுகளை எடுத்து உலகை வழிநடத்துபவர்கள். இனிமேல், மே 20 தேனீக்கள் மற்றும் தேனீ வளர்ப்பவர்களின் உலக விடுமுறையாக இருக்கும், மேலும் இந்நாள் உலக தேனீ தினமாக அறிவிக்கப்பட்டதன் மூலம், தேனீக்கள் பற்றி உலகம் இன்னும் விரிவாக சிந்திக்கத் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்." என உலக தேனீ தினத்தை துவக்கியவரும் ஸ்லோவேனியாவின் தேனீ வளர்ப்பு சங்கத்தின் தலைவருமான Boštjan Noč குறிப்பிட்டுள்ளார்.
Source : Slovenia.gov.si / fao.org / un.org/