free website hit counter

மனமே..நலனே..!

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகம் முழுவதும் உள்ள மக்களில், ஒவ்வொரு எட்டு நபர்களில் ஒருவர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார் என உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மதிப்பீடொன்று சொல்கின்றது.

பதற்றம், மிகை அச்சம், மனச் சோர்வு, என்பவற்றால் உளநலப்பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆன்மீகத்தில் நம் துயரங்களுக்கெல்லாம் காரணம் நம் எண்ணங்களே என்கிறார்கள் பெரியோர்கள். எண்ணங்களின் பிறப்பிடம் மனம்தானே. நம் மனத்தினைத் தெருநாய்க்கு ஒப்பிடுகின்றார் பட்டினத்தார். கடைத்தெருவில் ஒவ்வொரு கடையாக ஓடி அலைகின்ற நாயைப் போல நம் மனமும் அலைகிறது என்கிறார்.'பேயாய் உழலும் சிறு மனமே' என, மனதின் ஊசலாட்டத்தை பற்றி பாரதியாரும் கவலை கொள்கிறார்.

நம் மனதின் செயல்முறைதான் எத்தனை வித்தியாசமானது. பயப்படக்கூடிய விஷயங்களில் சில சமயங்களில் மனம் துணிந்து நிற்கிறது.துணிய வேண்டிய நேரத்தில் பயந்து ஒடுங்குகிறது.காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது. நடந்து போன காலங்களுக்காக அழுகிறது.நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது.அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது. அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும் போது சக்தி அற்றுப் போய் தளர்ந்து விடுகிறது.

இந்தச் சூழலிலிருந்து விடுபட்டு, எதிலும் துணிந்து நிற்கக்கூடிய சக்தி எப்போது இந்த மனத்துக்கு வரும்?. இவை எல்லாம் மாயையே என்பதைத் தத்துவார்த்தமாக உணர்ந்தால் எதிர்கொள்ளும் நம்பிக்கை பிறக்கும். "வேறொன்றில் பற்றையழித்து , பரம்பொருளைத் தியானித்து வழிபடு. இறப்பும் பிறப்புமாகிய பிறவிப் பெருங்கடலில் இருந்து உன்னை நான் கை தூக்கி விடுவேன்" என்கின்றான் கீதோபதேசக் கண்ணன்.

அப்படியே செய்து பார்க்க முயன்றாலும் அதுவும் முடியவில்லை.ஒன்றை மறந்தால் இன்னொன்று வருகிறது. புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்காக வெற்றிலை போட போய் வெற்றிலை போட்டுக் கொண்டே புகைபிடிக்கும் இரட்டைப் பழக்கம் வருவது போல் மறக்க முயன்றதை மறக்க முடியாமல் புதிய நினைவுகளும் புகுந்து கொண்டு மனதை மேலும் அலைக்கழித்து விடுகின்றன.

சிலந்தி எப்படி வலை கட்டிற்றென்று அதற்குத் தான் தெரியும்.இந்த சிக்கல்கள் எப்படி வருகின்றன என்று இறைவனுக்குத் தான் தெரியும். கப்பலில் பயணம் செய்வது நம் பொறுப்பு. அதை கரை சேர்க்க வேண்டியது இறைவன் பொறுப்பு. அலையில்லா கடல் ஒன்றை இறைவன் உருவாக்கும் போது சலனம் இல்லாத மனம் ஒன்று உருவாகிவிடும்.

சலனமும் சபலமும் கவலையும் இல்லாதவர்கள் யார் இருக்கிறார்கள்?

மரணபரியந்தம் மனம் தன் வித்தையை காட்டிக் கொண்டே இருக்கிறது. மனதுக்கு இப்படி எல்லாம் சுபாவங்கள் உண்டு என்று இள வயதிலேயே தெரிந்து கொண்டு விட்டால் பிறகு வருவன எல்லாம் மாயையே என்று வைராக்கியம் பிறந்துவிடும். அதற்கு வேண்டியது மனதுக்கு வருகின்ற துயரங்களை இறைவனிடம் ஒப்படைத்து விட்டு, பிறர்க்கு தொல்லை இல்லாத மகிழ்ச்சியை அனுபவிக்கப் பழக வேண்டும் என்பதே எங்கள் முன்னோர்கள் எடுத்துரைத்த வழிமுறையாகும்.

மனதை தூய்மையான, மென்மையான வெள்ளைக் காகிதம் போல வைத்திருக்கப் பழக வேண்டும். அதனை எப்படிச் சாத்தியமாக்கலாம்?

தியானம், யோகா, நடை, உடல் முதலான பயிற்சிகளும், வாசிப்பு, எழுத்து, வரைதல், இசை, ஆடல், முதலான கலைமுயற்சிகளும், உளநலனைப் பேணுவதற்குச் சிறப்பான வழிமுறைகள் என்கிறார்கள் அறிஞர்கள். இத்தனை முறைகளையும் ஒன்றாகக் கலந்துதான் நம் ஆலயவழிபாடுகளும், அதனை ஒட்டிய சடங்குகளும், பண்டிகைகளும். அவற்றை செய்தபோதும், நம் மனம் வசப்படவில்லை, வளப்படவில்லை என்றால், மீண்டும், மீண்டும் அவற்றைத் திருத்தமாகச் செய்யப் பழக வேண்டும். அதுவே ஒரு பயிற்சியாக, ஒருநாள்  மனமே வசப்படும்.

இன்று அக்டோபர் 10. உலக மனநலநாள் !

- மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula