புதிய ஒரு அண்டவியல் பகுத்தாய்வில் எமது சூரிய குடும்பமும் பல மில்லியன் கணக்கான நட்சத்திரங்களும் அமைந்துள்ள பால்வெளி அண்டத்தில் மாத்திரம் விண்வெளியில் வானொலி அலைகள் மூலம் கிட்டத்தட்ட 36 ஏலியன் அதாவது வேற்றுக்கிரக வாசிகளின் குடியேற்றங்கள் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நுண்ணறிவு மிக்க வேற்றுக்கிரக வாசிகள் இவ்வாறு இருக்கலாம் என்பதற்கு நேரடி ஆதாரம் இல்லை என்ற போதும், இவ்வாறான ஒரு எதிர்பார்ப்பை நொட்டிங்ஹாம் பல்கலைக் கழக மீளாய்வு ஒன்று இவ்வாறு கணித்துள்ளது. வான்பௌதிகவியல் பத்திரிகையில் (Astrophysics journal) வெளியான இந்தத் தகவலில் எமது பூமியில் எவ்வாறு உயிர் வாழ்க்கை தொடங்கி மனித இனம் பரிணமித்துள்ளதோ கிட்டத்தட்ட அதே நிபந்தனையை எமது பால்வெளி அண்டத்தில் அறியப் பட்ட கிரகங்களுடன் ஒப்பிட்டே இந்தப் புதிய கணிப்பை இப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதில் எமது பூமியில் இருக்கும் மனித இனம் மட்டும் விண்வெளியில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக வானொலி அலைகளை அனுப்பி உயிரினத் தேடலை முன்னெடுத்து வருகின்றது. பூமியில் மனிதனைப் போன்ற அறிவார்ந்த சிந்திக்கும் உயிரினம் பரிணாமப் படியில் தோன்ற 5 பில்லியன் வருடங்கள் எடுத்துக் கொண்ட நிலையில் இதே வருடக் கணக்கை ஏனைய அறியப் பட்ட கிரகங்களுடனும் ஒப்பிட முடியும் என்றும் அவ்வாறு ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 36 உயிரினக் குடியேற்றங்கள் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது என்றும் நொட்டிங்ஹாம் பல்கலைக் கழக வான் பௌதிகவியலாளர் பேராசிரியர் கிறிஸ்தோபர் கொன்செலிஸ் தெரிவித்துள்ளார்.
பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இந்த யோசனை பிரபஞ்ச அளவுகோலில் பிரயோகிக்கப் பட்டு இந்தக் கணிப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்தக் கணிப்பை வான் உயிரியல் கொப்பர்னிக்கன் லிமிட் என்று விளக்கப் படுகின்றது. ஆனால் CETI எனப்படும் இந்த அறிவார்ந்த ஏலியன் குடியேற்றம் ஒன்று குறைந்த பட்சம் பூமியில் இருந்து 17 000 ஒளியாண்டுகள் தூரத்தில் தான் காணப்பட முடியும் என்றும் கணிப்பிடப் பட்டுள்ளதால் இவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி, தகவல் - Skynews
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்