1977 தமிழீழக் கோஷத்தினை முன் வைத்து, தமிழர் விடுதலைக் கூட்டணியாக தமிழ் அரசியல்வாதிகள், போட்டியிட்ட தேர்தல்.
இத் தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில், அரசியல் பேச்சாளனாக நான் அவதாரம் எடுத்திருந்த காலமது. அவ்வாறான ஒரு பிரச்சாரக் கூட்டத்திற்குப் பேச்சாளனாக வந்திருந்த அந்த மனிதனின் எளிமையும், இயல்பும் என்னைக் கவர்ந்தது. அவர்தான் ஈழத்தின் மூத்த தலைமுறையில் பலர் மறந்துவிட்ட, புதிய தலைமுறைக்குத் தெரியாத, ஈழத்து எழுத்தாளனான ஆசிரியர் வ.அ.இராசரத்தினம். அவர் பிறந்து வளர்ந்த, வாழ்ந்த மூதூர் மண் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டிருக்கிறது. காரணம், யுத்தமும் மரணமும். ஆனால், காலங்கள் பல கடந்தும் பேசப்பட வேண்டிய ஒரு கலைஞன் காணமற்போய்விட்டான். உயிரோடு இருந்திருந்தால், இன்று அவருக்கு வயது 99.
1925 ஜுன் 5 ந்திகதி, திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் கிராமத்தில் பிறந்த, ஆர்பாட்டங்கள் எதுவுமற்ற, மிகமிகச் சதாரணமான மனிதனாகவும், அற்புதமான கலைஞனாகவும் திகழ்ந்தவர் வ.அ.இராசரெத்தினம். அவரது எழுத்துக்களால் ஏலவே அறிந்திருந்தமையால், சக பேச்சாளானாக அவர் அருகிருந்த அந்தக் கணங்கள் மறக்க முடியாதவை.
மதுப்பழக்கம் உடையவர் என்பதால் பேசுகையில் மதுவின் நெடி அவரிடத்தில் இருந்து வந்தது. ஆனாலும் அவரது பேச்சினை மிகத்தெளிவாக ஆலாபனைகள் அலங்காரங்கள் அற்ற மிக இலகு தமிழில், சராசரி மக்களுக்கும் புரியக் கூடிய எளிமையாகப் பேசினார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதெல்லாம் கூட்டணிப்பிரமுகர்கள் மேடையில் பேச ஆரம்பிக்கையில், 'ஓடையிலே என் சாம்பல் ஓடும் போதும் ஒன் தமிழே சலசலத்து ஓடவேண்டும்.. ' என அடுக்குமொழியில் அமர்க்களப்படுத்தித் தொடங்குவார்கள். அவ்வாறான பேச்சுக்களை மக்களும் வெகுவாக ரசித்து கைதட்டி மகிழ்வார்கள். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு 'கைதட்டல்களையெல்லாம் கணக்கெடுத்தால், கருத்துச்சொல்லமுடியாது. கடைசியா கைதட்டல்களுக்காகவே கதை சொல்ல வேண்டி வரும்.. அதைவிட நமது பேச்சும் பொருளும் யாருக்கானது எனத் தெளிந்து கொண்டு இலகுவாகச் சொன்னால்தான் நாம் பேசும் விடயங்கள் மக்களுக்குச் சென்று சேரும்' என்றார். எவ்வளவு உண்மையான வார்த்ததைகள்.
வாழ்வாதாரத்துக்கென ஒரு ஆசிரியனாகவும், வாழ்வின் உன்னததுக்காய் எழுத்தாளனாகவும், வாழ்ந்த ஒரு கலைஞன் வ.அ.இராசரத்தினம். எழுத்தாளனின் படைப்புக்களை, அச்சில் வடிக்கும் அவஸ்த்தையின் தன்மைபுரிந்ததினால் அவரும் மனைவியும் இனைந்து, ஒரு பதிப்பகத்தையும் நடத்தினார்கள். இராசத்தினம் அவர்கள் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் பலவாக இருந்தபோதும், எனக்குத் தற்போது ஞாபகத்தில் இருப்பது, ஒருகாவியம் நிறைவேறுகிறது எனும் குறுநாவலும், தீர்த்தக்கரை எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள தீர்த்தக்கரை என்ற சிறுகதையும் மட்டுமே. ஏனெனில் அவை இரண்டும் அற்புதமான வாழ்வியல் சித்திரங்கள்.
தீர்தக்கரை:-
ஆடிஅமாவாசைக்கு முந்தையதினம், மகாவலி நதி, திருமலைக்கடலில் கலக்கும் கங்கைத்துறையில், (இது உப்பாறுக்கும், மூதூருக்கும் இடையில் உள்ள கழிமுகம்) கொட்டியாரக்குடாவின் பல பகுதிகளிலும், இருந்து மக்கள் மாட்டுவண்டில்களில், குடும்பம் குடும்பமாக வந்து கூடுவார்கள். அன்று மாலை தம்பலகாமம் கோணேஸ்வரர் கோவிலில் இருந்து வரும் பூஜை விக்கிரகமும், கோவில் பணியாளர்களும் வந்து, வழிபாடுகளை ஆரம்பிப்பார்கள். வழிபாட்டின் தொடர்ச்சியாக திருக்கரைசேர் புராணம் விடிய விடியப் படிக்கப்படும். காலையில் விக்கிரகத்துடன் சென்று கடலும், கங்கையும், கலக்குமிடத்தில் ஆடிஅமாவாசைத்தீர்த்தம் ஆடுவார்கள். இதனால் அந்தக்கழிமுகத்துக்கு தீர்த்தகரை என்ற பெயரும் உண்டு.
தீர்த்தக்கரையின் மற்றொருபுறத்தில், கலைநிகழ்ச்சிகள் பலவும் விடிய விடிய நடைபெறும். இந்தத் தீர்த்தக் கரையில், தன் எழுத்துக்களை அச்சாக வெளியீடு செய்யும் ஒரு எழுத்தாளனின் அவஸ்த்தையை அற்புதமாகச் சொல்லும் கதைதான் தீர்த்தக்கரை. எழுத்தாளன், தன்மனைவியின் கைவளையல்களை அடகுவைத்து, எழுத்துக்களை அச்சாக்குவது முதல், அதை வெளியிடுவது, வெளியீட்டின் பின் கைவளையல்களை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை, நடைமுறையில் அது பொய்துவிடுவது, ஏனையோரின் ஏளனம், என்பவற்றை சராசரிக் கதாபாத்pரங்களைக்கொண்டு, சாதாரண மனிதர்களின் உரையாடலில அற்புதமாக வடித்திருந்தார். இது அவரது வாழ்க்கையின் உண்மைநிகழ்வாகக் கூட இருக்கலாம். ஏனெனில் எழுத்தாளர்கள் பலரின் வாழ்க்கை யதார்த்தம் அதுதானே. இச்சிறுகதைத் தொகுதி கூட அவர்களது பதிப்பகவெளியீடு என்றே ஞாபகம்.
ஒரு காவியம் நிறைவேறுகிறது :-
இது ஒரு நெடுங்கதை அல்லது குறுநாவல். முதலில் வீரகேசரி பத்திரிகையிலும், பின்னர் வீரகேசரிப்பிரசுரமாகவும் வந்தது. இராசரத்தினத்தின் மனைவி மேரி லில்லி மரணமடைந்தபோது நடைபெறும் நிகழ்வுகழும், அவரகளிருவரின் வாழ்வியல் சம்பவங்களும், மாறிமாறி கவிதைப்படிமங்கள் போல இயல்பாகத் தொகுக்கப்பட்ட அருமையான கதை. உண்மையில் அது ஒரு காவியம்தான். கருத்தொருமித்த ஒரு கணவன் மனைவியரது வாழ்க்கையின் ரசனை மிக்கப் பதிவு அது. இதுவரையில், கணவன் மனைவியருக்கிடையிலான அப்படியொரு காதலின் வெளிப்பாட்டை எழுத்தில் காணவில்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு உணர்ச்சிபூர்வமானது. காதல் நினைவான தாஜ்மஹாலைப் போன்ற மற்றுமொரு காதல் நினைவுதான் ஒரு காவியம் நிறைவேறுகிறது.
https://open.spotify.com/episode/3YM5l8QKscuXi1zLrZEQKL?si=PfTo8K0pQh6jl4oy5Xx08A
வ.அ.இராசரத்தினம் என்றும் வாசிக்கப்பட வேண்டியவர். மூதூர் மன் தந்த, அந்த முத்தான அந்தக் கலைஞனின் படைப்புக்கள் எந்த வடிவில் இருந்தாலும், அதைப் பதிவு செய்யவும், படித்திடவும் தவறுதல் கூடாது. அவர் வாழ்வு சராசரியானதா இருந்திருக்கலாம். ஆனால் அவர் எழுத்துச் சாதாரணமானது அல்ல, அது சாதனையானது.
- மலைநாடான்