free website hit counter

மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்ற தமிழ் இளைஞர்!

கலாச்சாரம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மாடலிங் துறையில் தற்போது தமிழக இளைஞர்கள் பலர் சாதித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த கோபிநாத் ரவி என்ற இளைஞர், தேசிய அளவில் நடத்தப்படும் மிஸ்டர்.இந்தியா பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய அளவிலான கடந்த 55 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கட்டுடல் போட்டி‘ரூபரு மிஸ்டர். இந்தியா’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நாயகன் சியான் விக்ரம் முயற்சித்து வெற்றிபெறுவது இந்தப் போட்டிக்காகத்தான். நடப்பு 2021க்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 34 இளைஞர்கள் கலந்துக் கொண்டார்கள். இந்த போட்டியில் கோபிநாத் ரவி மிஸ்டர். இந்தியா பட்டத்தை வென்றதோடு, ‘பீப்ள்ஸ் சாய்ஸ்’, அதாவது மக்களின் தேர்வு என்ற பிரிவிலும் விருதை வென்றுள்ள முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதனால் கோபிநாத் ரவிக்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது. அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறார். அவரிடம் பேசியபோது தனது வெற்றிக்கதையை பகிர்ந்துகொண்டார். “கல்லூரி காலத்திலேயே எனக்கு மாடலிங் துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருப்பினும், படிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டு மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தேன். அதனால், அது தொடர்பான விஷயங்களை அறிந்துக் கொள்வதோடு, அதற்காக என்னை தயாரிப்படுத்தியும் வந்தேன். அப்போதே, மிஸ்டர்.சவுத், மிஸ்டர்.இந்துஸ்தான் போன்ற சில போட்டிகளில் கலந்துக் கொண்டு பட்டம் வென்றேன்.

அதேபோல் பேஷன் ஷோக்களில் ரேம்ப் வாக் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்தேன். பிறகு தான் மிஸ்டர்.இந்தியா போட்டி பற்றி அறிந்து அதில் கலந்துக் கொள்வதற்காக என்னை தயாரிப்படுத்தி வந்தேன். கோவாவில் நடைபெற்ற போட்டியில் கலந்துக் கொண்ட பிறகு தான் தெரிந்தது, இந்த பட்டத்தை இதுவரை தென்னிந்தியாவில் இருந்து யாரும் வென்றதில்லை என்று. அதனால், எப்படியாவது பட்டத்தை வெல்ல வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன், இறுதியில் அதற்கான பலன் கிடைத்ததோடு, மக்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டது” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார்.

ஆணழகன் பட்டம் கிடைத்த பிறகு இவருடைய அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்? அவரிடமே கேட்டோம். “அடுத்ததாக சர்வதேச அளவிலான பட்டத்தை வெல்ல வேண்டும். அதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன். அமெரிக்காவில் உள்ள பிளோரிடாவில் ‘மாஸ்டர்ஸ் ஆஃப் மிஸ்டர்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெறும் அப்போட்டியில் கலந்துக் கொண்டு பட்டம் வெல்ல வேண்டும், என்பது எனது அடுத்த லட்சியம்” என்கிறார் கம்பீரமாக! இவரை திரையுலகம் ஈர்க்கவில்லையா?

அதற்கும் பதில் இருக்கிறது இவரிடம்.. “பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் ‘பகிரா’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிறிய வேடமாக இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் நடித்தேன். அப்படத்தை தொடர்ந்து மேலும், மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, அதற்கான பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது, முன்னணி தமிழ் தொலைக்காட்சி பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க இருக்கிறது. அதில், நான் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறேன். இதுவரை எந்த ஒரு தமிழ் தொலைக்காட்சியிலும் இப்படியொரு நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டதில்லை. அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடக்க இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது அதன் பிரம்மாண்ட புரியும். அதேநேரம் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் எண்ணம் இல்லை.” என்கிறார். அவரை வாழ்த்துவோம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction