free website hit counter

மோடி அரசு அதிரடி - டிரைலரை வைத்து ஒரு படத்தை தடை செய்ய முடியாது !

சின்னத்திரை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த ஆண்டு பிப்ரவரியில் மோடி தலைமையிலான இந்தியாவின் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் முதல்முறையாக ஒரு புகார் முழுமையாக விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

பிரபல ஓடிடி தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் வெப் சீரிஸாக உருவாகியிருக்கும் தொடர் ‘கிரஹான்’ 1984-ல் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர் நிகழ்ந்த சீக்கிய கலவரங்களை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த தொடரின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், அது தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்தன. 'சீக்கியர்களின் படுகொலையை நியாயப்படுத்தும் விதமானக் காட்சிகள், 1984 சீக்கிய எதிர்ப்பு கலவரங்களைப் பற்றி ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஒரு மோசமான மனநிலையில் தவறாக இந்தக் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. சீக்கிய மதக் கொள்கைக்கு எதிராக இந்த ட்ரெய்லரில் சீக்கியர் ஒருவர் கொள்ளையடிப்பது, தீக்குளிப்பது போன்ற காட்சிகளைக் காட்ட திரைக்குழு முயன்று இருக்கிறது. அதனால் இந்தத் தொடரைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்ததுடன், டிஜிட்டல் மீடியா உள்ளடக்க ஒழுங்குமுறை கவுன்சில் (டி.எம்.சி.ஆர்.சி)-லிலும் ட்ரெய்லருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது.

இந்த கவுன்சிலானது, இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். அதேநேரம், இந்திய ஒலிபரப்பு கூட்டமைப்பால் இந்த கவுன்சில், தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பாகவும் கருதப்படுகிறது. டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளை உள்ளடக்கும் ஒரு பகுதியாக இந்த அமைப்பு விரைவில் இந்திய ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் அறக்கட்டளை (ஐபிடிஎஃப்) என புதிதாக பெயரிடப்பட இருக்கிறது. இந்நிலையில்தான் இந்த அமைப்பில் ‘கிரஹான்’ வெப் தொடருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகாரின் விசாரணை நேற்று நடந்தது. அதில் ட்ரெய்லரைப் பார்த்த பிறகு, டி.எம்.சி.ஆர்.சி புகாரை தள்ளுபடி செய்துவிட்டது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “மொத்தம் எட்டு எபிசோடுகள், பல மணி நேரங்கள் என ஓடும் ஒரு பெரிய தொடரை வெறும் 2 நிமிடம் 24 விநாடிகள் கொண்ட ட்ரெய்லரின் அடிப்படையில் தீர்மானிப்பது நியாயமற்றது. இந்த ட்ரெய்லர் எட்டு எபிசோடுகள் கொண்ட வெப்சீரிஸின் ஒரு சிறிய பார்வை மட்டுமே. எந்த ஒரு சமூகமும் இழிவான முறையில் இந்த ட்ரெய்லரில் மோசமாக சித்தரிக்கப்படவில்லை என்பதை கவுன்சில் ஏகமனதாக கண்டறிந்துள்ளதாக புகாரில் சொல்லப்பட்டுள்ளபடி ஒரு சீக்கிய நபர் கலவரத்தை கட்டமைக்க முயற்சிப்பதாக எந்தவிதமான அனுமானமும் இதில் இல்லை. இந்த ட்ரெய்லர் சட்டத்தின் வரையறைக்குள் உள்ளது. எனவே, இந்த புகார் தகுதி இல்லாமல் உள்ளது என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது”என்று விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் அன்றைய தினமே.. அத்தொடர் பைரசி வீடியோவாக வெளியாகிவிடும் நிலையில் சர்ச்சைக்குரியதாக இருந்தால் அதன்பின் அதன் பரவலைத் தடுப்பது கடினம் என்பது பற்றி இந்த அமைப்பு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. மற்ற மொழிவாரி தேசிய இனங்களை அசிங்கப்படுத்தும் உள்ளடக்கங்களை சுதந்திரமாக உலவவிடுவது பாஜகவின் வளர்ச்சிக்கு நல்லது என்ற நோக்கில் செயல்படுவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction