ஏழு கடல் ஏழுமலை, பற்றி ஒற்றை வரியில் சொல்வதாயின், மனிதனைக் கடந்து உயிரைத் தேடும் ராமின் சினிமா எனலாம். இதை இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே றொட்டடாமில் வைத்து இயக்குனர் ராமிடம் நேரிடையாகவே சொல்லியிருந்தேன். ராமின் எல்லாப் படங்களும் பார்த்திருக்கின்றேன். அவை எல்லாவற்றிலும் எனக்கு மிகவும் பிடித்த படம் " ஏழுகடல் ஏழுமலை " என்பேன்.
சினிமா என்பது எப்போதும் ஒரு கதையைச் சொல்லும் கலை மட்டுமல்ல. சில நேரங்களில் அது நம்மிடம் ஒரு கேள்வியை மட்டும் விட்டுச் செல்கிறது. அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவது பார்வையாளனின் உள்ளமாகிறது. இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ அப்படியான ஒரு திரைப்படம்.
இது ஒரு வழக்கமான காதல் கதை அல்ல. ஒரு பயணக் கதை அல்ல. ஒரு ஃபேன்டஸி திரைப்படமும் அல்ல. இவற்றின் எல்லைகளைக் கடந்து, மனிதன் என்றால் என்ன? உயிர் என்றால் என்ன? காதலுக்கு கால எல்லை உண்டா? மனித வாழ்க்கையின் மதிப்பு எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது? என்ற கேள்விகளை தனது தனித்துவமான சினிமா மொழியில் முன்வைக்கிறது ராமின் படைப்பு.
ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் உரையாடல்கள், அவர்களுக்குள் திறக்கும் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் – இவற்றின் ஊடாக படம் விரியும் போது, பார்வையாளன் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறானா அல்லது ஒரு நீண்ட கனவுக்குள் நுழைகிறானா என்ற குழப்பம் ஏற்படுகிறது. அந்தக் குழப்பமே இப்படத்தின் அழகும்; சில இடங்களில் அதன் பலவீனமும் கூட.
ஒரு ரயில்... மூன்று உயிர்கள்... எண்ணற்ற கேள்விகள்
படத்தின் மையத்தில் மூன்று முக்கியமான உயிர்கள் இருக்கின்றன.
சூரி ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரம் – சாதாரண மனிதனின் முகம். அவனுடைய வாழ்க்கை, அனுபவம், ஆசைகள், அச்சங்கள் எல்லாம் நமக்குப் பரிச்சயமானவை.
நிவின் பாலியின் பாத்திரம் அதற்கு நேர்மாறான ஒரு மர்ம உலகத்தைத் திறக்கிறது. அவன் யார்? அவன் எங்கிருந்து வருகிறான்? அவனது வயது என்ன? அவனது காலம் எது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் படத்தின் கதையோட்டத்தோடு மெதுவாகத் திறக்கின்றன. அஞ்சலி ஏற்றுக்கொள்ளும் பாத்திரம் இந்த இரு உலகங்களையும் இணைக்கும் உணர்வுப் பாலமாக அமைகிறது. இங்கே ராம் ஒரு முக்கியமான முயற்சியைச் செய்கிறார்.
மனிதர்களின் வயதை உடலால் அளக்க முடியுமா? உயிரின் மதிப்பை காலத்தால் அளக்க முடியுமா? என்று படம் கேட்கிறது.
ஆயிரம் ஆண்டுகள் வாழும் ஒருவனும், சில பத்தாண்டுகள் மட்டுமே வாழும் ஒருவனும் , இறுதியில் தேடுவது என்ன?
அன்பு, அருகாமை, பாதுகாப்பு, ஒரு மனிதனாக இன்னொருவரால் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற ஏக்கம்,
இதுதான் இந்தப் படத்தின் ஆழமான அடுக்குகள் என்பதே எமது புரிதல். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இது மற்றொருவருக்கு வேறொருவிதமாகவும் புரியக்கூடும். அதுவே இப்படத்தின் இன்னுமொரு சிறப்பு.
ராமின் சினிமா – கதையைவிட கருத்து பெரிதாகும் இடம்
‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ போன்ற படைப்புகளில் ராம் எப்போதுமே கதையை மட்டும் சொல்லவில்லை. அவர் தனது கதாபாத்திரங்களின் உள்ளே சென்று மனிதனை ஆராய முயன்றிருக்கிறார். ‘ஏழு கடல் ஏழுமலை’யிலும் அதே முயற்சி தொடர்கிறது. ஆனால் இம்முறை அவருடைய பார்வை இன்னும் தொலைவுக்குச் செல்கிறது.
மனித உறவுகளைத் தாண்டி, மனித உயிரையே கேள்விக்குள் கொண்டுவருகிறார். நாம் மனிதர்களை எப்படி நடத்துகிறோம்?. நம்மைவிட வேறுபட்ட உயிர்களுக்கு என்ன மதிப்பு கொடுக்கிறோம்?. நாம் வாழ்வதற்காக இன்னொரு உயிரை அழிப்பது நியாயமா?. மனிதன் தனது நாகரிகத்தைப் பற்றி பெருமைப்படும் அதே நேரத்தில், அவன் இன்னும் எவ்வளவு வன்முறையான உயிரினமாக இருக்கிறான்?
இந்தக் கேள்விகள் கதையின் அடித்தளத்தில் தொடர்ந்து ஓடுகின்றன. இதனால் படம் சில நேரங்களில் காதல் கதையாகத் தெரிகிறது. சில நேரங்களில் தத்துவப் படமாகத் தெரிகிறது. சில இடங்களில் அறிவியல் புனைகதையின் வாசனையும் வருகிறது. ஆனால் அதன் உள்ளார்ந்த மையம் ஒன்றே ஒன்றுதான். அது உயிரை நேசிப்பது.
காதல் – இரு மனிதர்களுக்கிடையிலானதா?
தமிழ் சினிமாவில் காதல் பெரும்பாலும் இரு மனிதர்களுக்கிடையிலான உணர்வாகவே கட்டமைக்கப்படுகிறது. ஆனால் ராம் அந்த எல்லையை விரிவுபடுத்துகிறார். காதல் என்பது ஒருவரை ஒருவர் விரும்புவது மட்டுமா? அல்லது இன்னொரு உயிரின் இருப்பை ஏற்றுக்கொள்வதா? அந்த உயிரின் சுதந்திரத்தை மதிப்பதா? அவன் அல்லது அவள் இல்லாமல் போய்விடக்கூடும் என்ற பயத்தில் அவர்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முயலாமல், அவர்களின் இருப்பை நேசிப்பதா?
இப்படம் காதலை ஒரு உணர்ச்சியிலிருந்து ஒரு தத்துவமாக மாற்ற முயல்கிறது.
அதனால்தான் வழக்கமான காதல் திரைப்படங்களை எதிர்பார்த்துச் செல்லும் பார்வையாளருக்கு படம் சற்று விலகியதாகத் தோன்றலாம்.இங்கே காதலுக்கு பாடல், பிரிவு, சந்திப்பு, மோதல் ஆகிய வழக்கமான சினிமா இலக்கணங்கள் மட்டுமல்ல. காலத்தையே எதிர்த்து நிற்கும் காதல் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
நிவின் பாலி – மனிதனா? காலத்தின் சாட்சியா?
நிவின் பாலியின் தேர்வு இப்படத்திற்கு ஒரு தனித்துவமான பரிமாணத்தை வழங்குகிறது. அவருடைய முகத்தில் இருக்கும் இயல்பான மென்மை, மர்மம், குழந்தைத்தனம், முதிர்ச்சி ஆகியவை ஒரே நேரத்தில் இயங்குகின்றன. இந்தக் கதாபாத்திரத்தை வெறும் “வித்தியாசமான மனிதன்” என்று பார்த்துவிட்டால் படத்தின் ஆழம் குறைந்து விடும். ஏனென்றால் அவன் ஒரு கேள்வி.
மனித வாழ்க்கையின் குறுகிய கால எல்லைக்கு வெளியே நின்று மனிதனைப் பார்ப்பது எப்படி இருக்கும்? என்ற கேள்வியின் உருவகமாக அவன் நிற்கிறான். அவன் பார்க்கும் மனிதர்களுக்கு வாழ்க்கை சில பத்தாண்டுகள். அவனுக்கு காலம் வேறு விதமாக இயங்குகிறது. அந்த முரண்பாடே கதாபாத்திரத்திற்கு ஒரு சோகத்தைத் தருகிறது.
நீண்ட காலம் வாழ்வது ஒரு வரமா? அல்லது அதிகமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிய சாபமா? படம் நேரடியான பதிலைத் தரவில்லை. ஆனால் புரிந்து கொள்ளவைக்கிறது. அந்தப் புரிதல் வேறுபடலாம் வெறுமையாகவும் போகலாம்.
சூரி – நம்மில் ஒருவன்
நிவின் பாலியின் கதாபாத்திரம் மர்மம் என்றால், சூரியின் கதாபாத்திரம் மண்ணின் வாசனை. சூரி இங்கு நகைச்சுவை நடிகராக மட்டும் பார்க்கப்படவில்லை. அவரது நடிப்பில் ஒரு சாதாரண மனிதனின் குழப்பம், பயம், அப்பாவித்தனம், கோபம், பாசம் ஆகியவை வெளிப்படுகின்றன. இது சூரியின் நடிப்பு பயணத்தில் குறிப்பிடத்தக்க வேறுபட்ட பாத்திரம்.
அவரைச் சுற்றி காமெடி எழுதாமல், அவருக்குள் இருக்கும் மனிதனைத் தேடியிருக்கிறார் ராம்.
சில இடங்களில் அவரது இயல்பான நடிப்பு படத்தின் கனவுத்தன்மையை நிலத்தோடு இணைக்கிறது. அது படத்தின் முக்கியமான பலங்களில் ஒன்று.
அஞ்சலி – கதையை நகர்த்தும் பெண்ணா? அல்லது கேள்வியை எழுப்பும் உயிரா? அஞ்சலியின் பாத்திரம் படத்தில் வெறும் காதல் இணைப்பாக இருக்கவில்லை. அவள் இடம்பெறும் தருணங்களில் மனித உறவுகளின் நுணுக்கங்கள் வெளிப்படுகின்றன.
கடற்கரையில், அவரை நேசிக்கும் மனிதனின் கண்ணுக்குள் தெரிவது காமம் இல்லை, அது பெருந்துயரின் ஏக்கம் என்பதை உணரும் தாயின் கருணையுள்ளமாகவும் வெளிப்படுகிறது.
ரயில் – வெறும் பயணச் சாதனம் அல்ல
இந்தப் படத்தில் ரயில் மிகவும் முக்கியமான குறியீடு. ரயில் எப்போதும் முன்னோக்கி செல்கிறது. அது பின்னால் விட்டுச் சென்ற நிலையங்களுக்குத் திரும்புவதில்லை. மனித வாழ்க்கையும் அப்படித்தான். நாம் கடந்த காலத்தை நினைக்கலாம். அதைப் பற்றி வருந்தலாம். அதை மாற்ற வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் காலம் ஒருபோதும் பின்னோக்கிச் செல்லாது. இதனால் ரயில் இந்தத் திரைப்படத்தில் ஒரு காலத்தின் உருவகமாக மாறுகிறது.
அதில் பயணம் செய்பவர்கள் மூன்று பேர் என்றாலும், அவர்களோடு பயணிப்பது மனித வாழ்க்கையின் பல்வேறு காலங்களும் அனுபவங்களும்தான்.
யுவன் சங்கர் ராஜா – இசை அல்ல, இன்னொரு கதாபாத்திரம்
ராமின் சினிமாவில் இசை ஒருபோதும் அலங்காரம் அல்ல. ‘ஏழு கடல் ஏழுமலை’யிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை காட்சிகளுக்கு பின்னால் ஒலிக்கும் இசையாக மட்டும் இல்லாமல், அவற்றின் உணர்வை விரிவாக்குகிறது. சில காட்சிகளில் வசனம் சொல்ல முடியாததை இசை சொல்கிறது. சில இடங்களில் காட்சி முடிந்த பிறகும் இசை மனதில் தொடர்ந்து நிற்கிறது. குறிப்பாக படத்தின் கனவுத்தன்மையையும் தனிமையையும் இசை வலுப்படுத்துகிறது. இங்கே யுவனின் இசை படத்தின் உணர்ச்சி மொழியின் ஒரு பகுதியாகிறது.
ராம் அமைக்கும் காட்சிகள் அழகுக்காக அல்ல, உணர்வுக்காக என்பதை வலியுறுத்தும். ராமின் படங்களில் இயற்கையும் இடங்களும் வெறும் பின்னணி அல்ல.அவை கதையின் மனநிலையாக மாறுகின்றன. கடல், ரயில், இருள், வெளிச்சம், சாலை, வானம் என ஒவ்வொன்றும் ஒரு உணர்வைத் தாங்குகின்றன.
‘ஏழு கடல் ஏழுமலை’ என்ற தலைப்பே ஒரு புவியியல் தூரத்தை மட்டுமல்ல, மனிதர்கள் கடக்க வேண்டிய உளவியல் தூரத்தையும் குறிக்கிறது என்றுணர முடிகிறது.
ஏழு கடல்கள் கடந்தும், ஏழு மலைகள் கடந்தும் சென்றாலும், மனிதன் தேடுவது இறுதியில் இன்னொரு உயிரின் அருகாமையே. இதுதான் தலைப்பின் கவித்துவமான சாத்தியம்.
ஆனால் எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்குமா? என்றால் இங்கேதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய சவால் இருக்கிறது.
இப்படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் உருவாக்கப்படவில்லை. வேகமான திரைக்கதை, தொடர்ச்சியான சம்பவங்கள், தெளிவான கதைக்களம், உடனடியாகப் புரியும் உணர்ச்சி ஆகியவற்றை எதிர்பார்க்கும் பார்வையாளருக்கு , அவர்களது பொறுமையைச் சோதிக்கலாம்.
இது புரியாத படம் அல்ல; வேறு விதமாகப் புரிந்துகொள்ள வேண்டிய படம். ஒரு படத்தைப் புரிந்துகொள்வது என்றால் அதன் கதையை மட்டும் புரிந்துகொள்வதா? சில படங்கள் கதை மூலம் புரிகின்றன. சில படங்கள் உணர்வு மூலம் புரிகின்றன. சில படங்கள் முடிந்த பிறகுதான் புரியத் தொடங்குகின்றன. ‘ஏழு கடல் ஏழுமலை’ மூன்றாவது வகையைச் சேர்ந்த படம்.
அதனால்தான் இந்தப் படம் ஒரு முறை பார்த்து மறந்துவிடும் படமாக இல்லாமல், பார்த்த பிறகு மனதுக்குள் தொடர்ந்து ஓடும் ஒரு ரயில் பயணமாக மாறுகிறது. அந்த ரயிலில் இறங்கும் நிலையம் நமக்குத் தெரியாது. ஆனால் பயணத்தின் ஒரு கட்டத்தில் நம்மை நாமே சந்தித்துவிடுகிறோம். அதுவே ‘ஏழு கடல் ஏழுமலை’யின் மிகப்பெரிய வெற்றி.
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்